Skip to main content

இப்போ லோகேஷ், அப்போ கெளதம் மேனன்... மீண்டும் மேஜிக் நடக்குமா? கமல் ரசிகர்கள் வெயிட்டிங்!   

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
kamal vetaiyadu vilayadu

 

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' என சக்ஸஸ் க்ராஃபில் மேலே ஏறிக்கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்'. அறிவிப்பில் இருந்தே கமல் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். காரணங்களில் ஒன்று லோகேஷ் ஒரு தீவிர கமல் ரசிகர். அதற்கேற்ப ஃபர்ஸ்ட் லுக்கிலிருந்து வெளிவந்த புகைப்படங்கள் வரை அனைத்தும் மாஸாக இருக்கின்றன. ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, அனிருத் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'விக்ரம்' படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

'ஒரு கமல் ரசிகரே படத்தை இயக்கி இருப்பதால், பார்த்து பார்த்து உருவாக்கி இருப்பார்' என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்கள் ரசிகர்கள். இதுபோலவே 2006 ஆம் ஆண்டு கமலை வைத்து ஒரு கமல் ரசிகர், ரசிகர்கள் விரும்பிய கமல்ஹாசனை சிறப்பாகத் திரையில் காட்டி ஒரு படத்தை உருவாக்கி அது பெரிய வெற்றியையும் பெற்றது. அந்தப் படம்தான் 'வேட்டையாடு விளையாடு'. அப்போது இளம் இயக்குனராக, நியூ வேவ் டைரக்டராக இருந்த கௌதம் மேனன் தான் அந்த கமல் ரசிகர்.

 

மின்னலே, காக்க காக்க என இரண்டு பெரிய வெற்றிகளை அதற்கு முன்பு கொடுத்திருந்த கௌதம் மேனன் காதல் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் பெயர் பெற்ற இயக்குனர். அப்பொழுதே சில பேட்டிகளில் தான் ஒரு கமல் ரசிகர் என்றும் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று 'சத்யா' என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்த பொழுது அதற்கு முன்பு சில ஆண்டுகள் ரசிகர்கள் மிஸ் பண்ணிய ஸ்டைலிஷான கமல்ஹாசனை தன் படத்தில் காட்டினார். வேட்டையாடு விளையாடு படத்தின் ஓப்பனிங் சீன் இன்றளவிலும் கமல்ஹாசனின் படங்களில் மிகச்சிறந்த ஓபனிங் சீனாகக் கருதப்படுகிறது.

 

kamal gowtham menon

 

"என் கண்ணு வேணும்னு கேட்டியாமே.." என்று தொடங்கி "கேட்ட மூடுறா" என்று கோபத்துடன் கமல் சொல்ல அங்கு தொடங்கும் சண்டைக்காட்சி அப்படியே கற்க கற்க பாடலுடன் தொடர்ந்து அப்படியே ஓப்பனிங் பாடலாக அமைந்தது கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. கமல் படங்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சிறந்த ஓபனிங் சீன்களில் அதுவும் ஒன்று.

 

'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலின் கதாபாத்திரம் வீரமாகவும் அதேநேரம் பெண்களை மதிப்பதாகவும் ஸ்டைலான ஆங்கிலம் பேசுவதாகவும் என அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்கத்தக்கதாக செதுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் கமலின் உடைகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. கமலின் மேனரிசங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரசிகனால் ரசித்து ரசித்து உருவாக்கப்பட்டது. உச்சக்கட்டமாக "சின்னப் பசங்களா யார்கிட்ட" என்று கமல் கேட்பது அப்போதைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடுவது போல ஒரு கமல் ரசிகனால் அனுபவித்து எழுதப்பட்டது. காதல் காட்சிகளும் பாடல்களும் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் என்றும் மறக்க முடியாதவை.

 

இப்படி ஒரு கமல் ரசிகராக கௌதம் மேனன் தன் அபிமான நடிகரை வைத்து உருவாக்கிய திரைப்படம் ரசிகர்கள் பார்க்க விரும்பிய கமல்ஹாசனை திரையில் கொண்டு வந்தது. இப்போது 'விக்ரம்' படமும் அப்படி ஒரு கொண்டாட்டத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். விரைவில் விடை தெரியும்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்'-ம.நீ.மவில் புகைச்சல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
 'I am resigning with great regret'-M.N.M

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

அதேநேரம் அரசியல் கட்சிகளின் கூட்டணி காய் நகர்த்தலில் ஏற்படும் அதிருப்தி காரணமாக சிலர் தான் பயணித்த அரசியல் கட்சிகளிலிருந்து மற்றொரு கட்சிகளுக்கு தாவும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடும் என காத்திருந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிலருக்கு தேர்தலில் இருந்து மக்கள் நீதி மய்யம் விலகியது அதிருப்தியை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலை சந்திக்காமல் திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட்டு ஒன்றை வாங்கி விட்ட நிலையில் இது கட்சிக்குள் பல்வேறு புகைச்சல்களை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை சந்திக்காமல் விலகுவது கட்சியினுடைய வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருக்கும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த அனுஷ்கா ரவி மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளதோடு அவர் பாஜகவிலும் இணைந்துள்ளார்.

 'I am resigning with great regret'-M.N.M

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் அரசியலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து மிக மன வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

கமல் தயாரிப்பில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
lokesh kanagaraj introduced as actor in kamal production inimel album song

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிராபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து, 'தி ஐ' (The Eye), ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். 

இதைத் தவிர்த்து பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ என்ற ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதில் முதலில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தெலுங்கில் அதிவி சேஷ் நடிக்கும் டகோயிட் (Dacoit) படத்தில் நடிக்கிறார். ஷேன்யில் டியோ இயக்கும் இப்படத்தை சுப்ரியா யர்லகடா தயாரிக்க பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. 

lokesh kanagaraj introduced as actor in kamal production inimel album song

இதையடுத்து  ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் வேலு நாச்சியார் பையோ பிக் உருவாகுவதாகவும் வேலு நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. இதனிடையே கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றவுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது . அதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது. 

இந்த நிலையில் ஸ்ருதிஹாசனின் ஆல்பம் பற்றிய தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ருதிஹாசன் இசையமைக்க கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளார். துவர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ள இந்த ஆல்பம் பாடலில் இதில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.