/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/442_9.jpg)
கவுண்டமணி, கடந்த 1996 ஆம் ஆண்டு, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியுள்ளார். அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து, 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், 1996 - 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
ஆனால் ஒப்பந்தத்தின் படி 2003 வரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. அதனால் ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும் எனக் கூறி கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் நியமிக்கப்பட்டு உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி வழக்கறிஞர் ஆணையர், சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில், முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே கவுண்டமணியிடம் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், கவுண்டமணியிடமிருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, விசாரணையின் போது கவுண்டமணிக்கு சொந்தமான நிலத்தை அவரிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)