gopi nainar praised nandhan movie and request to cm mk stalin

சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த 20ஆம் தேதி வெளியான படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமான காட்சிகள் மற்றும் வசனங்களுடன் பேசியிருக்கின்றனர். இப்படத்திற்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

Advertisment

இதையடுத்து பல்வேறு ஊர்களில் இருக்கும் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. காட்சி முடிந்தவுடன் சசிகுமாரிடமும் இயக்குநர் சரவணனிடம் அவர்கள் கண்ணிர்க மல்க பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு இயக்குநர் கோபி நயினார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “இந்தியாவில் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டிருக்கும் சனநாயக உரையாடலான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை நேர்மையான திரைக் கதையின் வழியாக தன் சொந்த மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறது ‘நந்தன்’.

Advertisment

இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் நடித்தவர்கள் எல்லோருமே சமூகம் பொறுப்புள்ளவர்களாகவே இருந்தார்கள் என்பதுதான். குறிப்பாக இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி. ‘இன்னும் ஜாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள் இந்தியாவில் ஜாதி இருக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுகிறேன்...’ என்ற வாசகத்துடன் துவங்குகிறது இத்திரைப்படம். சனநாயகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இயக்குநர் இரா. சரவணனின் தைரியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். காலனிக்குள் இன்னும் அனுமதிக்கப்படாத நந்தன் எனும் தேரை, தன் முதுகில் சுமந்து வந்த இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரை, இன்னும் நாடு முழுவதும் கொடியேற்ற முடியாமல், நாற்காலியில் அமர முடியாமல், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நுழைய அனுமதிக்காத படி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட எண்ணற்ற பட்டியலின மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் சார்பாக நெஞ்சுயர்த்தி நன்றியை சொல்லிக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டின் முதல்வருக்கு பணிவான வேண்டுகோள், நந்தன் எனும் இத்திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால்... தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நந்தன் திரைப்படத்தை காண வேண்டிய சமூக அரசியலுக்கான அவசியத்தை உணரும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவுறுத்தலை வழங்குவது என்பது சமூக நீதியோடு தொடர்புடையது என்பது என் பணிவான கருத்து. நந்தன் திரைப்படம் சனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் என்பதால் இளம் தலைமுறையினருக்கும் மாணவ மாணவியருக்கும் போய் சேர வேண்டிய அவசியம் கருதி அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வழியாக நந்தன் திரைப்படத்தை காண வழிவகை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இவரது பாராட்டுக்கு இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment