"மன உளைச்சலை உண்டாக்குகிறது" - அறம் பட இயக்குநர் பதில் புகார்

gopi nainar complaint against srilanka lady

நயன்தாரா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அறம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். தற்போது ஆண்ட்ரியாவை வைத்து 'மனுசி' என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார்.

அண்மையில் கோபி நயினார் மீது இலங்கையைச் சேர்ந்த சியாமளா என்ற பெண், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். கோபி நயினார் 2018 ஆம் ஆண்டு 'கருப்பர் நகரம்' என்ற தலைப்பில் திரைப்படம் எடுப்பதாகக் கூறி ரூ.30 லட்சம் முன்பணமாகப் பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கோபி நயினார், சியாமளா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சியாமளா புகாருக்கு பதிலளிக்கும் வகையில் இந்த புகாரை கொடுத்துள்ளதாக கோபி நயினார் தெரிவித்துள்ளார். கருப்பர் நகரத்தின் படப்பிடிப்பு திடீரென நின்றுவிட்டது. பின்பு படப்பிடிப்பை தொடர தயாரிப்பாளர்கள் முயற்சித்தனர். அதனால் வரவு, செலவு குறித்து அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது. நான் வெறும் இயக்குநர் மட்டுமே. எனவே தேவையில்லாமல் சியாமளா என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் என விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோபி நயினார், "இப்படத்தில் நான் வெறும் இயக்குநர் மட்டும் தான். ஆனால் சியாமளா கூறிய புகாரை தொலைக்காட்சியில் பார்க்கும் போது மன உளைச்சலை உண்டாக்குகிறது. என்னுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. அறம் என்ற மக்கள் சினிமாவை உருவாக்கினேன். தொடர்ந்து அதைப்போலஉருவாக்குவேன். மக்களின் நீதி பற்றி பேசும் நபராக இருப்பேனே தவிரஎதிராக இருக்கமாட்டேன். எந்த மக்களுக்காக கலையை போராட்ட வழியாக மாத்துகிறேனோ அதுவே இப்போது எனக்கு நெருக்கடி தருவதாக உணர்கிறேன்" எனப் பேசினார்.

DIRECTOR GOPI NAINAR
இதையும் படியுங்கள்
Subscribe