இயக்குநர் கோபி நயினார் அறம் படத்தை தொடர்ந்து ‘கருப்பர் நகரம்’ என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வந்தார். அப்படம் சில சிக்கலில் சிக்கி வெளியாகாமல் இருக்கிறது. இதையடுத்து ஆன்ரியாவை வைத்து ‘மனுசி’ படத்தை இயக்கி முடித்தார். இப்படம் சென்சார் போர்டில் எதிர்ப்பை சம்பாதித்து சிக்கலில் இருக்கிறது. 

இந்த நிலையில் கோபி நயினார் மீது அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜ்கமல் என்பவர் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களின் முனிலையில் பேசிய அவர், “நான் 2018ல் கோபி நயினாரிடம் உதவி இயக்குநரா சேர்ந்தேன். அவர் இயக்கிய கருப்பர் நகரம் படத்தில் பணிபுரிந்தேன். இந்த பட படப்பிடிப்பு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. நான் உட்பட என் கூட வேலை செஞ்ச நான்கு பேருக்குமே சம்பளம் தரல. கேட்டால், உங்க கல்யாணத்துக்கு பெருசா செய்றேன், நடிக்க வாய்ப்பு தரேன்னு போலியான ஆசை வார்த்தைகளை சொன்னார். 2020ஆம் ஆண்டு பெரியார் திடலில் சாதி மறுப்பு திருமணம் செய்தேன். அதில் கோபி நயினார் பங்கேற்கவே இல்லை. சம்பளமும் தரவில்லை, கல்யாணத்துக்கும் எதுவுமே செய்யவில்லை. அதன் பிறகு அவரிடம் நான் வேலை செய்யவில்லை. வெளியே வந்துவிட்டேன்.

அவர் விசிக-வின் மாவட்ட செயலாளராக இருந்த போது கட்சியில் இணையவிருந்தேன். ஆனால் அவர் கட்சி தலைவர் குறித்தும் கட்சியை குறித்தும் தரக்குறைவாகப் பேசினார். அப்புறம் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில நிர்வாகி சார்பில் தலைவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தேன். அதையடுத்து என்னை மீறி எப்படி கட்சியில் சேருவீங்க என மிரட்டுகிறார்” என்றார். மேலும் வெளியே வந்த பிறகும் தன் சொந்த வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை அவர் தரப்பு ஆட்கள் உருவாக்கினார்கள் என்றும் அவரது அடியாட்கள் என்னை அடித்தார்கள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், “வாழ வழியில்லாமல் நிர்க்கதியாய் நின்று கொண்டிருக்கிறேன். அவரிடம் சம்பளம் கேட்ட என்ற காரணத்திற்காகவும், விசிக-வில் இணைந்தேன் என்ற காரணத்திற்காகவும் என்னிடம் பாகுபாடு காட்டுகிறார். என் மீது போலி புகார் கொடுத்து சிறையில் அடைத்தார். வெளியே வந்த பிறகும் விடவில்லை. எங்க அம்மா குடும்ப நிலையை குறித்து ஆவடி கமிஷ்னர் ஆஃபீஸில் மனு கொடுத்து ஒரு சமாதான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய கேட்டிருந்தார். பின்பு ஏ.சி. தலைமையில் கூட்டம் நடந்தது.அங்கு குற்றப்பின்னணி இருக்கும் நபர்களை அழைத்து வந்து கூட்டம் நடந்து பின்பு 9 நபர்களை வைத்து அடித்தார். எனக்கு நிம்மதியாக வாழ வேண்டும் அவ்வளவுதான்” என்றார்.

Advertisment

இந்த புகார் குறித்து விளக்கமளித்த கோபி நயினார், “அவர் மீது நானும் அவதூறு வழக்கு கொடுத்திருக்கிறேன். அவர் சொல்வதை ஏன் மீடியா முன்பு சொல்கிறார். நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியது தானே. 2018ல் அவர் என்னிடம் வந்து சேர்ந்ததாக சொல்கிறார். அதுக்கப்புறம் மனுசி, காலனி என இரண்டு படம் எடுத்துவிட்டேன். எந்த உதவி இயக்குநரும் இவர் வைத்த குற்றச்சாட்டை வைக்கவில்லை. அவர் வேலை பார்த்த கருப்பர் நகரம் படத்திலே அவரை தவிர வேறு எந்த இயக்குநரும் இப்படி சொல்லவில்லை. எது சொன்னாலும் ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள்.

ஏ.சி. தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் படம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்ட போது, எதற்குமே அவருக்கு பதில் தெரியவில்லை. நான் மிரட்டியதாக அவர் காட்டிய வீடியோ, என் வீட்டில் எடுக்கப்பட்டது. அவரின் உறவினர்கள் தான் என்னை மிரட்டினார்கள். நான் கரடிப்புத்தூர் பிரச்சனையை கையில் எடுத்த பிறகு தான் இவர் பேசுகிறார். என் மூலம் பாதிக்கப்பட்டதாக அவர் சொல்லும் நபர்கள் ஏன் இதைப் பற்றி பேசவில்லை. இவர் ஏன் பேசுகிறார். அவர் வேறு ஒரு நோக்கத்தோடு செயல்படுகிறார்” என்றார்.