ADVERTISEMENT

கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்' எழுதியதன் பின்னணி இதுதானா? - உண்மைகளை உடைக்கும் கண்ணதாசனின் மகன்

06:32 PM May 24, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிப்பு, ஒளிப்பதிவு, சட்டம், அரசியல் எனப் பல துறைகளில் இயங்கி வருபவரும் கவிஞர் கண்ணதாசனின் மகனுமான கோபி கண்ணதாசனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சமீபத்தில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவரிடம், கண்ணதாசன் குறித்து பேசப்படும் சில விஷயங்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வியெழுப்பினோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

கவிஞர் தினமும் காலையில் எழுந்து பாடல் எழுதச் செல்லும்போது பத்து கார்கள் வெளியே இருக்கும். அதில் முதல் கார் ஒரு ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் செல்லும். அங்கு பாட்டு எழுதி முடித்துவிட்டு வேறு காரில்தான் அடுத்த ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் செல்வார் என்று கூறப்படுகிறதே, அது உண்மையா?

அது உண்மைதான். ஒரு நாளைக்கு 6 முதல் 7 பாடல்கள்வரை பிஸியாக எழுதிக்கொண்டு இருந்தார். அவர் வாழ்ந்தது 54 வருடங்கள் மட்டுமே. தன்னுடைய 19 வயதில் கன்னியின் காதலி என்ற படத்தில் முதல் பாடலை எழுதினார். அங்கிருந்து ஆரம்பித்து அடுத்த 34 வருடங்கள் தொடர்ச்சியாக எழுதினார். பாடல் எழுதுவது போக, இடையிடையே கவிதைத் தொகுப்பிற்காக கவிதை எழுதுவது, நாவல் எழுதுவது, படம் தயாரிப்பது என பம்பரமாக சுழன்று வேலை செய்தார். 94 வயதுக்குள் எவ்வளவு வேலையைச் செய்யமுடியுமோ அதை 54 வயதிற்குள்ளேயே செய்து முடித்துவிட்டார்.

சிவகாமியின் மகன் பாடல் காமராஜருக்காக எழுதிய பாடல், சொன்னது நீதானா பாடல் எம்.எஸ்.விக்காக எழுதிய பாடல் என்கிறார்களே, அது உண்மையா? இதேபோல எத்தனை பாடல்கள் உள்ளன?

யார் யாருக்காக எத்தனை பாடல்கள் எழுதினார் என்ற பட்டியல் என்னிடம் கிடையாது. சிவகாமியின் மகன் பாடல் காமராஜருக்காக எழுதிய பாடல்தான். சொன்னது நீதானா பாடல் எம்.எஸ்.விக்காக எழுதிய பாடல் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல கவிஞரைப் பற்றி நிறைய பொய்கள் உலாவருகின்றன. கவிஞர், காஞ்சி பெரியவர் பற்றி வரும் செய்தியெல்லாம் உண்மை கிடையாது. கவிஞருக்கு விபத்து நடந்ததாகவும், காஞ்சி பெரியவரை போய் தேவர் பார்க்கச் சொன்னதாகவும், அதன் பிறகே கவிஞர் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியதாகவும் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. கவிஞர் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதியதற்கு தினமணி கதிர் தான் காரணம். அவர்கள் கேட்டதால்தான் கவிஞர் அதை எழுதினார்.

கவிஞர் கொஞ்சமாக மது அருந்திவிட்டுத்தான் கவிதை, பாடல்கள் எழுதுவார் என்கிறார்கள், அது உண்மையா?

அதில் கொஞ்சம்கூட உண்மை கிடையாது. தமிழையும் தமிழ்க்கவிதைகளையும் உயிருக்கு நிகராக நேசித்தவர் கவிஞர். அதை இறைவனுக்கு நிகராக வைத்தவர். எனவே தன்னிலை மறந்த நிலையில் கவிதையையோ பாடலையோ எழுதக்கூடாது என்பது அவருக்குள் அவரே விதைத்துக்கொண்ட வரைமுறை. குடித்துவிட்டு ஒரு பாடல்கூட அவர் எழுதியது கிடையாது. மதிய நேரங்களில் கொஞ்சமாக குடிப்பார். பின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். சாயங்காலம் எழுந்து ஏதாவது பாடல் எழுதும் வேலை இருந்தால் எழுதுவார். இல்லாவிட்டால் பத்திரிகைக்கு எழுதுவார். கோவிலுக்குச் சென்று பிரசங்கம் பண்ணுவார். இதுதான் அவருடைய தினசரி வழக்கம். இரவு 11 மணிக்குமேல் கொஞ்சமாக குடித்துவிட்டு மீண்டும் தூங்கிவிடுவார். ’ஒரு கையில் மதுவும் ஒரு கையில் மங்கையும் இல்லாமல் வாழ்ந்தால் ஏன் வாழ்ந்தாய் என்று இறைவன் என்னை கேட்பான்’ என்று கவிதைகளில் அவரே எழுதியிருப்பதால் எந்நேரமும் அவர் குடித்துக்கொண்டே இருப்பார் என்று நினைக்கிறார்கள். ஆனால், அப்படியில்லை.

எம்.ஜி.ஆருக்கும் கவிஞருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. புதிய கவிஞர்களை திரைத்துறைக்குள் கொண்டுவந்து எம்.ஜி.ஆர் ஊக்குவித்தார் என்று சொல்லப்படுகிறதே, அது உண்மையா?

எம்.ஜி.ஆரோடும் பிரச்சனை இருந்தது. கலைஞரோடும் பிரச்சனை இருந்த காலம் உண்டு. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும்தான் ஜாம்பவான்கள். அவர்களை பகைத்துக்கொள்ள யாருக்குமே தைரியம் வராது. அவர்களை பகைத்துக்கொண்டால் பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இரு மனைவி, 14 குழந்தைகள் இருந்தபோதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பகைத்துக்கொள்ளும் மனதைரியம் கண்ணதாசனுக்கு இருந்தது. அதே நேரத்தில் இருவருக்கும் இடையே ஆழமான நட்பும் இருந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதுதான் கண்ணதாசன் அரசவைக் கவிஞராக இருந்தார். எம்.ஜி.ஆர் அடிப்படையிலேயே நல்ல குணம் கொண்டவர். கையில் பணம் இல்லை என்று எப்போது சென்று என் தந்தை கேட்டாலும் கொடுத்து உதவுவார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT