வெங்கட் பிரபு தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ஐமேக்ஸ் திரைக்கேற்பவும் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் ‘விசில் போடு...’ என்ற முதல் பாடல் வெளியானது. இப்பாடலை மதன் கார்க்கி வரிகளில் விஜய்யுடன் இணைந்து யுவன் பாடியிருந்தார். அதைத்தொடர்ந்து விஜய் பிறந்தநாளான கடந்த ஜூலை 22ஆம் தேதி ‘சின்ன சின்ன கண்கள்...’ என்ற பாடல் வெளியானது. இப்பாடலைக் கபிலன் வைரமுத்து வரிகளில் விஜய் பாடியிருந்தார். மேலும் இப்பாடலில் மறைந்த பாடகி பவதாரிணி குரலை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியிருந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘ஸ்பார்க்...’ என்ற பாடல் வெளியாகியது. இப்பாடலைக் கங்கை அமரன் வரிகளில் யுவனுடன் இணைந்து விருஷா பாலு பாடியிருந்தார். இந்த பாடலுக்கு கலவையான விமர்சங்கள் எழுந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இப்படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “உங்களுக்காக ஒரு அற்புதமான ட்ரைலரை நாங்கள் தயார் செய்து வருகிறோம். எனவே தயவுசெய்து பொறுமை காத்திருங்கள். எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள், நாளை உங்களுக்குச் சரியான அப்டேட்டை தருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.