the goat next update

Advertisment

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு...’ கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. அதில் விஜய்யுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்...’,விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதிலும் விஜய் பாடியிருக்க, அவருடன் இணைந்து மறைந்த பாடகி பவதாரணி பாடியிருந்தார். இவரது குரல் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டது. மேலும் விஜய்க்கு பிறந்தநாள் தெரிவிக்கும் விதமாக ‘தி கோட் பர்த்டே ஷாட்ஸ்’ என்ற தலைப்பில் படக்குழு ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து இப்படத்தின் இசைப் பணிகளை யுவன் ஷங்கர் ராஜா தொடங்கிவிட்டதாக வெங்கட் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கடந்த சில தினங்களாக ஒரு தகவல் வெளியானது. இந்தத்தகவலுக்கு தற்போது படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, “அந்தத்தகவலில் உண்மை இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க நாங்கள் 24/7 மணி நேரமும் உழைத்து வருகிறோம். நெகட்டிவிட்டியை பரப்பாதீர்கள்” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆகஸ்ட் 1 அடுத்த அப்டேட் என்றும் கூறியுள்ளார்.