GNR Kumaravelan

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் சினம் படம் குறித்து இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

“நாம் செய்திகளில் பல விஷயங்களைப் பார்க்கிறோம். ஆனால், சில விஷயங்கள் மட்டும் நம் மனதில் அடுத்த சில நாட்களுக்கு ஓடிக்கொண்டே இருக்கும். அது மாதிரியான ஒரு விஷயத்தை மையமாக வைத்துதான் சினம் படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படம் பேசும் விஷயம் நாம் பார்த்துப் பழகியது என்பதால் படம் பார்ப்பவர்கள் கதையோடு எளிதாக ஒன்றிப்போக முடியும்.

Advertisment

இந்தக் கதை அருண் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததும் அவருடைய முந்தைய போலீஸ் படங்களைப் பார்த்தேன். அதிலிருந்து வித்தியாசமாக என்ன பண்ணலாம் என்று பார்த்து இந்தக் கதையை எழுதினேன். இந்தப் படத்தில் எஸ்.ஐ.யாக அருண் விஜய் நடித்திருக்கிறார். நாம் வெளியே இருந்து பார்க்கும் போலீஸுக்கும் அவர்களுடைய வாழ்க்கையை அருகில் இருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. போலீஸாரின் வாழ்க்கையில் உள்ள சில பிரச்சனைகளையும் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம்.

அருண் விஜய்க்கு கதை பிடித்திருந்ததால் உடனே சம்மதம் சொன்னார். இந்தப் படத்தை அப்பாவே தயாரிக்கட்டும், உங்களுக்கு சம்மதமா என்றார். விஜய்குமார் சார் இந்தப் படத்திற்குள் வந்ததும் எனக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. அவரே செட்டில் இறங்கி நிறைய வேலைகள் செய்வார். இயக்குநருக்கு என்ன தேவையோ அதை பண்ணிக்கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது என்றால் அதற்கு விஜய்குமார் சார்தான் முக்கிய காரணம்.

Advertisment

கரோனா காரணமாக படத்தை இரண்டு ஆண்டுகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. நான் எப்போதெல்லாம் சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் அருண் விஜய்யின் பாசிட்டிவிட்டிதான் என்னை உற்சாகமாக்கும். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. மற்ற நடிகர்கள் சாங் சீக்குவன்ஸ் எடுக்கப்போகிறோம் என்றால் உற்சாகமாகிவிடுவர்கள். ஏனென்றால் அதுதான் ரொம்பவும் ஈஸியாக இருக்கும். ஆனால், அருண் விஜய் ஃபைட் சீக்குவன்ஸ் எடுக்கும்போதுதான் உற்சாகமாவார்.

சினம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று நம்புகிறேன்”.