கன்னட நடிகரான தர்ஷன், விஜயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் விஜயலட்சுமி, தர்ஷன் தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி பிரிந்து சென்றுள்ளார். அதே சமயம் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுடன் தர்ஷன் பழகி வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி, தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பவித்ரா பிரிந்து சென்றால்தான் தர்ஷனும், விஜயலட்சுமியும் ஒன்றாக வாழ்வார்கள் எனக் கடுமையான வார்த்தைகளில் பேசி ஆபாசமான படங்களையும் அனுப்பியிருக்கிறார்.
இதனைப் பவித்ரா, தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி கொலை செய்துள்ளார் தர்ஷன். இந்த வழக்கு தொடர்பாக தர்ஷன், பவித்ரா உள்ளிட்ட கொலை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் அவர்கள் சொகுசாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சில வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. பின்பு அவர்கள் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவர்களுக்கு கர்நாடக உயர்நீதி மன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமீன் வழங்கியது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் சிறையில் இருந்த அவர்கள் பின்பு வெளியே வந்தனர். ஆனால் தர்ஷனின் ஜாமீனை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் தர்ஷன் உள்ளிட்ட கைதான நபர்களுக்கு கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்தனர். மேலும் தர்ஷனை மீண்டும் கைது செய்ய உத்தரவிட்டு சிறையில் கைதிகளுக்கு எதாவது சிறப்பு சலுகைகள் ஏற்பாடு செய்தால் உடனடியாக ஜெயில் கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்யப்படுவார் என அதிரடி காட்டியது. இதையடுத்து தர்ஷன் மீண்டும் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 64-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரானார்.
அப்போது, “நான் பல நாட்களாக சூரியனை பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை தொற்று உருவாகியுள்ளது. என் உடைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இனிமேல் என்னால் இப்படி வாழ முடியாது. நான் என்ன கேட்டாலும் நீதிபதி அறிவுறுத்த வேண்டும் என சிறை அதிகாரிகள் சொல்கின்றனர். அதனால் நீங்கள் எனக்கு கொஞ்சம் விஷம் கொடுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் இப்படியே வாழ விரும்பவில்லை” என நீதிபதியிடம் கேட்டார்.
இதனிடையே அவர் தன்னை பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பல்லாரி சிறைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து அதற்கு பதிலாக அவருக்கு மெத்தை, பெட்ஷீட், தலையணை வழங்கவும் அவரை சிறையில் நடக்க அனுமதி வழங்கவும் நீதிபதி அறிவுறுத்தினார். பின்பு இந்த வழக்கை வரும் 19ஆம் தேதி தள்ளி வைத்தார்.