
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஜெனிலியா. அதன்பின் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவிலிருந்து ஒதுங்கிக்கொண்டார் ஜெனிலியா.
தற்போது கரோனா அச்சுறுத்தல் பரவலாக இருக்கும் மும்பையில் வசித்து வரும் ஜெனிலியா, கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் கிருபையால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆனால், அதே நேரத்தில் இந்த 21 நாட்களும் தனிமையில் இருந்தது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். வீடியோ கால்களும், டிஜிட்டல் உலகில் மூழ்குதலும் தனிமையின் கோரமுகத்தைத் தடுத்துவிட முடியாது. என்னுடைய குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் இருங்கள். இதுதான் ஒருவருக்கு மிகவும் தேவையான உண்மையான பலம். விரைவாகப் பரிசோதனை செய்து, ஆரோக்கியமான உணவுகளை உண்டு, திடமாக இருப்பதே இந்தப் பேயை எதிர்த்துப் போராட ஒரு வழி” என்று தெரிவித்துள்ளார்.