தமிழில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் கௌதம் கார்த்திக் கடந்த் பிப்ரவரி மாதம் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டார். கடைசியாக ஆகஸ்ட் 16 1947 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில் கடந்த வருடம் அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்தாண்டும் இதுவரை ஒரு படமும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் ஒரு நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தை அடுத்து ‘ரூட்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கௌதம் ராம் கார்த்திக், ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு மன்னிப்பு கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “என்னிடம் அடிக்கடி வரும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து தெளிவுபடுத்துவதற்காக இதை எழுதுகிறேன்.
கடந்த 2 ஆண்டுகளில் பலரும் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் யாரிடம் செல்வது என்று தெரியாமலும் அல்லது கடந்த காலத்தில் என்னிடம் மேனேஜராக இருந்தவரிடம் சென்று வருவதாகவும் கூறினர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் எனது மேனேஜராக கோபிநாத் திரவியம் அதிகாரப்பூர்வமாக இருந்து வருகிறார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த குழப்பத்தால் யாராவது சிரமத்திற்கு ஆளாகியிருந்தால், அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.