இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரும் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்து வந்தனர். ஆனால் சில கருத்து வேறு பாடு காரணமாகப் பிரிந்தனர். அதன் காரணத்தால் இருவரும் ஒன்றிணைந்து இதுவரை பணியாற்றாமல் இருந்து வருகின்றனர். இந்த மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு கூட, வைரமுத்து, மொழியை விட சில நேரங்களில் இசை பெரிது, இசையை விட சில நேரங்களில் மொழி பெரிது... இதை புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என ஒரு மேடையில் பேசியிருந்தார். இது இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிற இளையராஜாவைத் தான் அவர் மறைமுகமாக குறிப்பிடுகிறார் எனப் பேசப்பட்டது.
வைரமுத்துவின் பேச்சிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரன், இனிமேல் வைரமுத்து இளையராஜாவை பற்றி சின்ன குற்றமோ குறைகளோ சொல்வதாக இருந்தால், அதற்குரிய விளைவுகளை வேறு மாதிரி சந்திக்க நேரிடும் எனப் பதிலடி கொடுத்திருந்தார். இந்த பதிலடிக்கு வைரமுத்து பதில் கூற மறுத்துவிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் அது பற்றி பேசவிரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இளையராஜாவும் வைரமுத்துவும் ஏன் பிரிந்தார்கள் என்ற காரணத்தை கங்கை அமரன் தற்போது வெளிப்படையாக சொல்லியுள்ளார். ஒரு பட விழாவில் பேசிய அவர், “ஒரு முறை அண்ணனுக்கும் எனக்கும் சண்டை வந்தது. அதனால் பத்து வருஷம் அவரிடம் பேசாமல் இருந்தேன். அவரது பாடல்களுக்கு வரிகள் எழுதாமலும் இருந்தேன். அந்த நேரத்தில் தான் வைரமுத்து இடத்தை பிடித்துவிட்டார். அவர் வந்த பிறகு எனக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
புதியவர்கள் வருவதை வரவேற்கிறோம். ஆனால் அவர், இளையராஜாவிற்கு முகவரி கிடைத்ததே அவர் வந்ததினால் தான் என பேசினார். ஆனால் அதை நான் அண்ணனிடம் சொல்லவில்லை. சொன்னால் எனக்கு வாய்ப்பு கிடைக்காத கோவத்தால் இப்படி சொல்கிறேன் என சொல்லிவிடுவார் என விட்டுவிட்டேன். ஆனால் பல கல்லூரி நிகழ்ச்சிகளில் தன்னுடைய வரிகளால் தான் இளையராஜா வளர்ந்து கொண்டிருக்கிறார் என வைரமுத்து பேசி வந்தார். இந்த காரணத்தால் தான் வைரமுத்துவும் இளையராஜாவும் பிரிந்தார்கள்” என்றார்.