கேபிஒய் பாலா ஹூரோவாக நடித்துள்ள ‘காந்தி கண்ணாடி’ படம் கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷெரிஃப் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை ஜெய் கிரண் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்க விவேக் - மெர்வின் இருவரும் இசையமைத்துள்ளனர். இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த வரவேற்பை நினைவுகூரும் வகையில், படத்தின் விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் தனது அலுவலகத்தில் ‘காந்தி கண்ணாடி’ படக்குழுவினரை அழைத்து சிறப்பு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்நிகழ்வு, நன்றியும் மகிழ்ச்சியும் நிரம்பிய நினைவுகூரும் விழாவாக அமைந்தது.
தயாரிப்பாளர் ஜெய் கிரண் கூறுகையில், “காந்தி கண்ணாடி தயாரித்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இப்போது மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் பாராட்டும் கிடைப்பது, உண்மையான கதை எப்போதும் மனங்களைத் தொட்டே தீரும் என்பதை நிரூபிக்கிறது” என்றார். இயக்குநர் ஷெரீஃப், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் மீது தனது நன்றியைத் தெரிவித்தார்.