
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான வெப் சீரிஸில் ஒன்று 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. தொடக்கத்திலிருந்து 8 சீசன்கள் முடியும்வரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் தொடர். கடந்த ஆண்டு முடிவடைந்த இந்தத் தொடரை எச்.பி.ஓ. நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் ஏராளாமன விருதுகளையும், சாதனைகளையும் படைத்திருக்கிறது.
இந்நிலையில் இத்தொடருக்கு முந்தைய கதையை வெப் சீரிஸாக எடுக்கவுள்ளதாக எச்.பி.ஓ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை களத்தைக் கொண்டது.
இதை 10 எபிசோட்களாக எடுக்க எச்.பி.ஓ. நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தொடரை 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் சில எபிசோட்களை இயக்கிய ரயான் கோன்டால், மிக்யுல் ஸ்போச்னிக், உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர். இத்தொடருக்கு ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்தொடருக்கான நடிகர், நடிகையர் தேர்வை எச்.பி.ஓ. நிறுவனம் தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு இத்தொடர் இணையத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.