ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவான ‘கேம் சேஞ்ஜர்’ படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்க எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியிருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றது. இருப்பினும் படத்திற்கு இருந்த ஓபனிங்கால் முதல் நாளில் மட்டும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று ரூ.186 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன் பிறகு பெரிதாக வசூல் ஈட்டவில்லை. பாடல்களும் பெரிதாக ஹிட்டடிக்கவில்லை. இது குறித்து கடந்த மார்ச்சில் பேட்டி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தமன், எந்த பாடலிலும் சரியான ஹூக் ஸ்டெப் இல்லை என கூறியிருந்தார். இதையடுத்து படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது, ஷங்கருடன் பணிபுரிந்தது மோசமான அனுபவம் என்ற ரீதியில் பேட்டியளித்திருந்தார். அதாவது, படத்தின் நீளம் முதலில் 7.5 மணி நேரம் இருந்ததாகவும் அடை தன்னிடம் கொடுத்து ட்ரிம் செய்ய சொன்ன பிறகு 3 மணி நேரமாக குறைத்ததாகவும் பின்பு தனிப்பட்ட சில காரணங்களால் படத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அண்மையில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, கேம் சேஞ்ஜர் பண்ண ஒத்துக்கொண்டது என்னுடைய முதல் தவறான முடிவு என வெளிப்படையாக கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து படத்தின் இணை தயாரிப்பாளரான ஷிரிஷ் ரெட்டி சமீபத்திய பேட்டியில், “கேம் சேஞ்ஜர் தோல்வியடைந்த போது பட ஹீரோ உதவி செய்தாரா? அல்லது டைரக்டர் உதவினாரா? அவர்கள் என்னவென்று கூட பேசவில்லை. யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை” எனக் கூறியிருந்தார். இது தெலுங்கு திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்பு இது குறித்து விளக்கமளித்த தில் ராஜு, “ஷிரிஷ் மீடியா முன்பு முதல் முறையாக பேசுகிறார். அதனால் நிதி நெருக்கடி குறித்து கொஞ்சம் எமோஷ்னலாகி விட்டார். அவர் தவறான நோக்கத்தில் சொல்லவில்லை. தவறான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டார்” என்றிருந்தார்.
இந்த நிலையில் ஷிரிஷ் ரெட்டி தனது பேச்சு குறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பேட்டியில் நான் பேசிய வார்த்தைகள், சமூக ஊடகங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. மேலும் சில ராம் சரண் ரசிகர்கள் இதனால் வருத்தமடைந்துள்ளனர். ராம் சரன் கேம் சேஞ்ஜர் படத்திற்காகத் தனது முழு நேரத்தையும் ஆதரவையும் கொடுத்தார். நாங்கள் பல ஆண்டுகளாக சிரஞ்சீவியின் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறோம். சிரஞ்சீவி, ராம் சரண் ஆகியோரின் நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் நாங்கள் பேசுவதில்லை. எனது வார்த்தைகள் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.