
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவான ‘கேம் சேஞ்ஜர்’ படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருக்க எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியிருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றது. இருப்பினும் படத்திற்கு இருந்த ஓபனிங்கால் முதல் நாளில் மட்டும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று ரூ.186 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன் பிறகு பெரிதாக வசூல் ஈட்டவில்லை. பாடல்களும் பெரிதாக ஹிட்டடிக்கவில்லை. இது குறித்து கடந்த மார்ச்சில் பேட்டி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தமன், எந்த பாடலிலும் சரியான ஹூக் ஸ்டெப் இல்லை என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது, ஷங்கருடன் பணிபுரிந்தது மோசமான அனுபவம் என்ற ரீதியில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஷங்கர், எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட படத்தின் நீளம் 7.5 மணி நேரம். இதை ட்ரிம் செய்து ஒரு முறையான படமாக மாற்றுங்கள் என சொன்னார். நானும் எடிட் செய்து படத்தின் அளவை 3 மணி நேரமாக குறைத்தேன். மூன்று வருடம் இந்த படத்தின் பணியாற்றினேன். பின்பு என்னுடைய வேறு சில படங்களில் கமிண்ட்மெண்டுகளால் வெளியேறிவிட்டேன்” என்றார். மேலும் ஷங்கருடன் பணிபுரிந்தது மோசமான அனுபவம் என்ற ரீதியில் தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார். இது தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.