இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே வலுத்துவரும் மோதலால் பொதுமக்கள் பலரும் பலியாகியுள்ளனர். அங்கு நிலவிவரும் அசாதாரணமான சூழல் காரணமாக, இரு தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரம் குறித்து ‘வொண்டர் வுமன்' உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இஸ்ரேலைச் சேர்ந்த நடிகை கால் கேடட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் இதயம் நொறுங்குகிறது. என் தேசம் போரைச் சந்தித்துள்ளது. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், என்னுடைய மக்களுக்காக வருந்துகிறேன். இது நீண்டகாலமாக நிலவிவரும் தீய சுழற்சி. இஸ்ரேல் சுதந்திரமாகவும் பாதுகாப்பாவும் வாழ தகுதியுடைய நாடு. எங்களுடைய அண்டை நாடும் அதற்கான தகுதி உடையதே. இப்போரில் பலியானவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன். கற்பனைகூட செய்து பார்க்க முடியாத இந்தப் பகைமை, விரைவில் முடிவுக்குவர பிரார்த்திக்கிறேன். இரு தரப்பு மக்களும் அமைதியாக வாழ எங்களுடைய தலைவர்கள் தீர்வுகாண வேண்டும். சிறந்த நாட்களுக்காக பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
நடிகை கால் கேடட்டின் இந்தப் பதிவிற்கு ஒரு தரப்பினர்வரவேற்பு தெரிவித்த நிலையில், இப்பதிவு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறி மற்றொரு தரப்பினர் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்தனர். இதையடுத்து, இப்பதிவிற்கு கீழே இருந்த கருத்து தெரிவிக்கும் வசதியை நடிகை கால் கேடட் நீக்கிவிட்டார்.