
தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து விஜயகாந்தின் 'கஜேந்திரா' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை புளோரா சயினி. அதைத் தொடர்ந்து குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட பல்வேறு மொழிகளில் 50 படங்களுக்கு மேலாக நடித்துள்ள புளோரா சயினி வெப்சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தான் சிறு வயதில் தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக புளோரா சயினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்ட புளோரா சயினி, "எனக்கு 20 வயது இருக்கும்போது 10 படங்களில் நடித்தேன். மாடலாகவும் நிறைய டிசைனர்களுடன் பணியாற்றியுள்ளேன். அப்போது ஒரு பிரபல தயாரிப்பாளரின் மீது காதல் கொண்டதால் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் என்னிடம் முறைகேடாக நடந்து கொண்டார்.
என் முகத்திலும் அந்தரங்க இடத்திலும் அடித்து துன்புறுத்தினார். என்னுடைய போனை பிடுங்கிக் கொண்டு வேலையை விடச் சொல்லி கட்டாயப்படுத்தினார். தொடர்ந்து 14 மாதங்களாக யாரிடமும் பேசவிடாமல் சித்திரவதை செய்தார். பின்பு ஒரு நாள் மாலையில் என் வயிற்றில் குத்தினார். அதன்பின்பு அங்கிருந்து ஓடி வந்து அம்மா, அப்பாவிடம் இருக்க ஆரம்பித்தேன். இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆனது. இப்போது நான் மகிழ்ச்சியாக என் வேலைகளைக் கவனித்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.