Skip to main content

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு; முழு விபரம் வெளியீடு!

Published on 04/03/2024 | Edited on 05/03/2024
Full details release forTN Govt Film Awards Announcement 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மறுநாள் (06.03.2024) புதன்கிழமை மாலை 06.00 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழா உரையாற்றுகிறார். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். 

2015 ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள் : 

சிறந்த படத்திற்கான முதல் பரிசு : தனி ஒருவன், இரண்டாம் பரிசு : பசங்க 2, மூன்றாம் பரிசு : பிரபா, சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு : இறுதிச்சுற்று, பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) : 36 வயதினிலே. 

2015 ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் : 

சிறந்த நடிகர்: ஆர். மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை : ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம் / 36 வயதினிலே), சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்), சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்), சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த உரையாடலாசிரியர்: இரா. சரவணன் (கத்துக்குட்டி), சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்தப் பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை), சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்), சிறந்த ஒலிப்பதிவாளர்: ஏ.எல்.துக்காராம், ஜெ.மஹேச்வரன்: (தாக்க தாக்க), சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) : கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்), சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : பிரபாகரன் (பசங்க 2), சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்), சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்), சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே மற்றும் இறுதிச்சுற்று), சிறந்த தையற் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா), சிறந்த குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் நிஷேஸ், பேபி வைஷ்ணவி (பசங்க 2), சிறந்த பின்னணிக் குரல் (ஆண்) : கௌதம் குமார் (36 வயதினிலே), சிறந்த பின்னணிக் குரல் (பெண்) : ஆர். உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று). 

Full details release forTN Govt Film Awards Announcement
மாதிரிப்படம்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2014-2015 : 

சிறந்த இயக்குநர்: கே. மோகன் குமார், சிறந்த ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே), சிறந்த ஒலிப்பதிவாளர்: வி. சதிஷ் (கண்ணா மூச்சாலே), சிறந்த படத்தொகுப்பாளர்: ஏ.முரளி (பறை), சிறந்த படம் பதனிடுவர்: வி. சந்தோஷ்குமார் (கிளிக்).

Full details release forTN Govt Film Awards Announcement

மேலும் தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்தம் 39 விருதாளர்களுக்குக் காசோலையும். விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்குகிறார். இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள், திரையுலகத்தைச் சார்ந்த பிரமுகர்கள், நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியரசு தின விழா; விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
Republic Day Celebration CM MK Stalin gave away the awards and medals

நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார். அந்த வகையில் மதுரையில் அரசுப் பள்ளி கட்டுவதற்காகத் தனது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாகக் கொடுத்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. ஊடகவியலாளர் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் சமூக ஊடகங்களில் வரும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உண்மையை வெளியிடுபவர். பொய்யான செய்தியால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க முகமது ஜுபைரின் பணி உதவி செய்கிறது எனத் தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் முதல் பரிசை மதுரை மாநகரம் காவல் நிலையம் பெற்றது. 2வது பரிசை நாமக்கல் காவல் நிலையம் பெற்றது. 3ஆம் பரிசை பாளையங்கோட்டை காவல் நிலையம் பெற்றது. இதற்கான கோப்பையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். 

Republic Day Celebration CM MK Stalin gave away the awards and medals

மேலும் மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்குக் காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கோ. சசாங்சாய், சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ப. காசி விஸ்வநாதன், ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கா.மு. முனியசாமி, மதுரை மண்டல மத்திய பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அ. பாண்டியன் மற்றும் இராணிப்பேட்டை அயற்பணி மத்திய நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த ராணிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெ. ரங்கநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதுடன் பரிசுத் தொகையாக 40 ஆயிரம் ரூபாய் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றன. 

Next Story

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கிய முதல்வர்!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
The Chief Minister gave awards to those who served the differently abled

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையிலும், அவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கும் சிறந்த நிறுவனங்கள் மற்றும் தடைகளை கடந்து சிறப்பாக பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழக அரசின் சார்பில் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக சிறந்த சமூக பணியாளர் விருது  எ.மோகன் என்பவருக்கும், சிறந்த நிறுவனத்திற்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியருக்கான விருது மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்ததற்காக திருச்சியைச் சேர்ந்த தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப்  ஆசிரியர் அ. வாசுகி தேவிக்கும். செவித்திறன் குறைபாடுடையோருக்குக் கற்பித்தற்காக கிருஷ்ணகிரி அண்ணா நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஜா.அருண்குமாருக்கும் வழங்கப்பட்டது.

பார்வைத்திறன் குறைபாடுடையோருக்குத் கற்பித்ததற்காக மதுரை செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி ஆசிரியர் அ. பாக்கியமேரிக்கும், சிறந்த பணியாளர்  மற்றும் சுய தொழில் புரிபவருக்கான விருதினை கை, கால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தொழுநோய் குணமடைந்தோர் பிரிவில் எஸ். நீலாவதி (சிறந்த சுயதொழில் புரிபவர்), செ. சுதீஷ்குமார் (சிறந்த பணியாளர்), அறிவுசார் குறையுடையோர் பிரிவில் பா. முத்துக்குமார், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பிரிவில் ரா. விஜயலெட்சுமி, பல்வகை மாற்றுத்திறனாளி பிரிவில் வி. சௌந்திர வள்ளி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மனநோயால் பாதிக்கப்பட்டோர் பிரிவில் இ. ஜாக்குலின் சகாயராணி, புற உலக சிந்தனையற்றோர் மற்றும் குறிப்பிட்ட கற்றலில் குறைபாடுடையோர் பிரிவில் ஆ. பிரேம்சங்கர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருதினை காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருதினை செவித்திறன் குறைபாடுடையோருக்குக் கற்பித்ததற்காக காஞ்சிபுரம் - தமிழ்நாடு அரசு செவித்திறன் குறையுடைய இளம் சிறார்களுக்கான இலவச ஆரம்ப பயிற்சி மைய ஆசிரியர்  பாலகுஜாம்பாளுக்கும், அறிவுசார் குறையுடையோருக்கு கற்பித்ததற்காக கன்னியாகுமரி - சாந்தி நிலையம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர் ஜெயசீலனுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய சிறந்த ஓட்டுநருக்கான விருதினை சுந்தர் வேலுவுக்கும், சிறந்த நடத்துநருக்கான விருதினை தர்சியஸ் ஸ்டீபனுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.