சசிகுமார் கடைசியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடித்திருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து ஃபீல் குட் டிராமாவாக இப்படம் அமைந்திருந்தது. மேலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. 
இப்படத்தை அடுத்து சசிகுமார் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகியுள்ள படம் ‘ஃப்ரீடம்’(Freedom). இப்படத்தை கழுகு படம் இயக்கிய சத்யசிவா இயக்கியிருக்க நாயகியாக ஜெய் பீம் மூலம் கவனம் ஈர்த்த லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். மேலும் மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாண்டியன் பரசுராம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.   

த்ரில்லர் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படம் 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் கடந்த 10ஆம் தேதி வெளியாகவிருந்தது. இதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியும் திரையிடப்பட்டது. பின்பு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி, படத்தை பார்த்து பாராட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் படம் அறிவித்த படி ஜூலை 10ஆம் தேதி வெளியாகவில்லை. பின்பு புது ரிலீஸ் தேதிகளும் வெளியானதாக செய்திகள் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜய கணபதி பிக்சர்ஸ், பட ரிலீஸ் குறித்து விளக்கமளித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் காரணமாக, வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.