Advertisment

“எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு” - மன்சூர் அலிகான்

​​m

Advertisment

மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, “மிகவும் கேவலமான அவமரியாதையான பேச்சு. வன்மையாகக் கண்டிக்கிறேன்” என எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். பின்பு அமைச்சர் ரோஜா, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், சிரஞ்சீவி, நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

இதனிடையே பல எதிர்ப்புக்கு மத்தியில், மன்சூர் அலிகான் விளக்கமளித்தார். அதில், “நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாகப் பேசவில்லை. உண்மையில் நான் அவரைப் பாராட்டித்தான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்கிறார்கள். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லை.” என்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எனத் தொடர்ச்சியாக திரைத்துறை சம்பந்தமான சங்கங்களிடமிருந்து மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் எழுந்து வந்தது. பின்பு மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் கொடுத்தனர். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இன்று ஆஜராகவில்லை எனக் குறிப்பிட்டு நாளை ஆஜராக அனுமதி வழங்க காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் திடீரென்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு ஆஜராக வருகை தந்தார் மன்சூர் அலிகான். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் முன் விளக்கமளித்தார். அதை எழுத்துப் பூர்வமாக காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 45 நிமிடம் இந்த விசாரணை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “தனிப்பட்ட முறையில் த்ரிஷாவை விமர்சிக்கவில்லை. ஒரு நடிகையாக அவரை நான் ரொம்ப மதிக்கிறேன்” என்றார்.

இந்த நிலையில் நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அவர் தெரிவித்து இருப்பதாவது: "ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றிபெற்றுவிட்டேன்.எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்துவிட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு! என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடற கற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவழும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை.

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார் அவர்கள். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூராம்மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10 ஆம் வகுப்பு வரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின்

நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி திரிஷாவே

என்னை மன்னித்துவிடு!

இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Mansoor Ali Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe