Skip to main content

”தண்ணிய போட்டு கரச்சல் பண்றாரு, இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க” - எனக்காக கருணாஸிடம் வாய்ப்பு கேட்ட என் பையன் 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 Anthony Daasan

 

நாட்டுப்புற பாடகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவில் பிஸியான பாடகராக வலம்வந்து கொண்டிருக்கும் பாடகர் அந்தோனி தாசனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”நான் கல்யாணம் செய்யும்போது எனக்கு 16 வயசு. என் மனைவிக்கு 15 வயசு. நாங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சுதான் என் தங்கச்சி கல்யாணத்தை நடத்திவைத்தோம். குடும்பச் சூழல் அந்த அளவிற்கு கஷ்டமா இருந்தது. எனக்கு எப்படி கல்யாணம் நடந்துச்சு என்பதை இப்ப நினைச்சு பார்த்தாலும் ரொம்ப விசித்திரமா இருக்கு. நான் இன்னைக்கு ஒரு மனுசனா நிலைச்சு நிற்க என் மனைவிதான் காரணம். நான் பாடிய எல்லா பாட்டுமே கல்யாணத்திற்கு பிறகு பாடிய பாடல்கள்தான்.

 

சினிமாவுக்கு வரவேண்டும் என்று நான் என்றைக்குமே நினைச்சு பார்க்கல. நாட்டுப்புற கலைஞராக என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். எதைச் செய்தாலும் திருப்தியாகச் செய்யவேண்டும் என்று நினைப்பேன். அப்படிச் செய்ததால்தான் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது. பின், சின்னப்பொண்ணு அக்கா குழுவில் இணைந்து பாட வாய்ப்பு கிடைத்தது. அந்த அக்காவுடன் இணைந்து 2006ஆம் ஆண்டு சங்கமம் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது கருணாஸ் அண்ணனின் அறிமுகம் கிடைத்தது. ஒரு வருடமாக அவரை தொந்தரவு செய்து திண்டுக்கல் சாரதி படத்தில் பாட வாய்ப்பு வாங்கினேன். நான் மட்டுமில்லை, குடும்பத்தில் உள்ள எல்லோருமே போன் செய்து எனக்கு வாய்ப்பு கேட்பார்கள். என் பையன் அவருக்கு போன் செய்து, ‘பெரியப்பா அவருக்கு வாய்ப்பு கொடுங்க, தண்ணிய போட்டு இங்க கரச்சல் பண்ணிக்கிட்டு இருக்கார் என்பான். ஒருவருடம் கழித்து திண்டுக்கல் சாரதி படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார்.

 

முதலில், ’திண்டுகல்லு திண்டுகல்லு...’ பாடலை நான் தான் பாடியிருக்கிறேன் என்று நிறைய பேருக்குத் தெரியாது. அது வெளியே தெரிய நாலு வருசமாச்சு. அதன் பிறகு ’மானே மானே...’ பாடல் எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. அது நானே எழுதி இசையமைத்த பாடல். அதை நிறைய நாட்டுப்புற மேடைகளில் பாடியிருக்கிறேன். பின்னர்தான், உறியடி படத்தில் பயன்படுத்தினோம்.

 

நான் பாடிய ’ஸ்டாலின் தான் வாராரு...’ பாடல் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைச்சுக்கூட பார்க்கல. மதன் கார்க்கி சார் மூலமாகத்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. பட்டிதொட்டியெங்கும் அந்தப் பாடல் சென்று சேர்ந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. எனக்கும் அந்தப் பாடல் மூலம் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ஸ்டாலின் சாரை நேரில் பார்த்தபோது ’ஸ்டாலின் தான் வாராரு...’ பாடலை நான் தான் பாடினேன் என்று சொன்னேன். ’ஓ அப்படியா... சூப்பர் சூப்பர்... ரொம்ப நல்லா இருந்துச்சு... எங்க வீட்டுல எல்லோரும் ரசிச்சாங்க’னு சொன்னார். ’சொன்னத செய்யுறாரு சொல்லாததையும் செய்யுறாரு...’ என்று முதல்வருக்காக ஒரு பாடல் பண்ணிருக்கேன். அதை அவர் கையாலேயே வெளியிட வேண்டும் என்று காத்திருக்கிறேன்". 

 

 

சார்ந்த செய்திகள்