தி.நகர் அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தமிழ் திரைப்பட நடிகர் சங்க கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் கட்டிடத்தின் உள்பகுதியில் இருந்து புகை வருவதைக் கண்ட காவலாளி, அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தேனாம்பேட்டை தீயணைப்புத்துறையினர் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் நடிகர் சங்க கட்டிட அலுவலகத்தில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிகள் தீக்கிரையாகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.