
மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் உன்னி முகுந்தன். ஆனால் தமிழ் சினிமாவில் தான் திரைத்துறையில் அறிமுகமாகியிருந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரி நடித்த கருடன் படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் உன்னி முகுந்தன் மீது அவரது மேலாளர் விபின் குமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், உன்னி முகுந்தன் தன்னை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மார்கோ படத்திற்குப் பிறகு, உன்னி முகுந்தனுக்கு கஷ்டமான காலம் வந்தது. பல படங்கள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டன. அதோடு உன்னி முகுந்தன் இயக்குநராக அறிமுகமாகவிருந்த படத்தில் இருந்து அதன் தயாரிப்பு நிறுவனமான கோகுலம் மூவிஸ் வெளியேறியதால் அந்த படமும் கைவிடப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சிக்குள்ளானார். மேலும் விரக்தியில் இருந்தார்.
நான் கடந்த 18 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். பல படங்களுக்கு பி.ஆர்.ஓ. பணிகளையும் கவனித்து வருகிறேன் அந்த வகையில் டொவினோ தாமஸின் நரிவேட்டை படத்தின் பி.ஆர்.ஓ.-வாக படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் படத்தை பாராட்டி எனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டேன். ஆனால் அது உன்னி முகுந்தனுக்கு பிடிக்கவில்லை. நான் பதிவிட்ட அன்று இரவே எனக்கு போன் செய்து மேலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சொன்னார். நான் சரி என்று சொன்னேன். அதன் பிறகுதான் அவர் நேரில் வந்து என்னை கார் பார்க்கிங்கிற்கு வர சொல்லி தகாத வார்த்தையில் திட்டி தாக்கினார். நான் உன்னி முகுந்தனிடம் 6 ஆண்டுகளாக வேலை பார்க்கிறேன். இதுபோன்ற அனுபவத்தை நான் எதிர்கொண்டதே இல்லை” என்றார்.
இந்த புகாரின் அடிப்படையில் உன்னி முகுந்தன் மீது கொச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.