‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் மூலம் சர்ச்சையில் சிக்கியிருந்தார் பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இப்படம் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதாக விமர்சனங்கள் எழுந்தது. இப்படத்தை அடுத்து ‘தி வேக்ஸின் வார்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கோரோனோவிற்கு எதிரான இந்தியாவின் போர் முயற்சியையும் உலகளாவிய நெருக்கடியைச் சமாளிக்க மருத்துவத் துறை எடுத்த முயற்சியையும் பேசியிருந்தது. இப்படம் பெரிதாக சர்ச்சையில் சிக்கவில்லை. ஆனால் தோல்வி படமாக அமைந்தது. 

Advertisment

இப்படங்களைத் தொடர்ந்து விவேக் அக்னிஹோத்ரி புதிதாக இயக்கியுள்ள படம் ‘தி பெங்கால் ஃபைல்ஸ்’. இப்படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார், சிம்ரத் கவுர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் இந்தியில் மட்டும் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா முதலில் கொல்கத்தாவில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெறவிருந்தது. ஆனால், சில காரணங்களால் பின்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஒரு ஹோட்டலில் நடந்தது. ஆனால் விழா பாதியிலே நிறுத்தப்பட்டது. காவல் துறையினர் விழா ஏற்பாட்டாளர்கள் உரிய அனுமதி வாங்கவில்லை எனத் தெரிவித்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். 

இப்படத்திற்கு முன்பு ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. 1946ஆம் ஆண்டு இப்போது கொல்கத்தாவாக இருக்கும் அப்போதைய வங்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் வங்கத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் கோபால் முகர்ஜியை தவறாகச் சித்தரித்துள்ளதாக கோபால் முகர்ஜியின் பேரன் சாந்தனு புகார் கொடுத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரில், படத்தில் தனது தாத்தாவை தவறாக சித்தரித்ததாகவும் வங்காள சமூகத்தை அவமரியாதை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக பேசிய சாந்தனு, “ட்ரெய்லரில் எங்கள் தாத்தாவை கசாப் கோபால் பந்தா எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எங்கள் தாத்தா, ஆட்டு இறைச்சி கடையை நடத்தியதால், கோபால் பந்தா என அழைக்கப்பட்டார். பெங்காலியில், பந்தா என்றால் ஆண் ஆடு என்று பொருள். இது போன்று எங்கள் தாத்தாவை அழைப்பது, அவமரியாதையாகும். இதையெல்லாம் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எங்களிடம் விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அவர் விசாரிக்கவில்லை. இந்தத் தவறான தகவலை அவர் எங்கிருந்து பெற்றார்? இந்த சித்தரிப்பு எங்கள் குடும்பத்தினரை காயப்படுத்தியுள்ளது. அக்னிஹோத்ரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக சட்டப்பூர்வ நோட்டீஸை அவருக்கு அனுப்பியுள்ளோம். படம் வெளியாவதற்கு முன்பு தவறான சித்தரிப்பை சரிசெய்ய வேண்டும்” என்றுள்ளார்.