மலையாளத்தில் ராப் பாடகராகப் புகழ் பெற்றவர் வேடன். சமீபகாலமாக ‘மீ டு’ சர்ச்சை, போதைப்பொருள் சர்ச்சை, அரசியல் கருத்து சர்ச்சை என தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டார். முதலில் ‘மீ டு’ சர்ச்சை பெரிதாக வெடித்த 2021ஆம் ஆண்டு சூழலில், இவர் மீது புகார் எழுந்தது. ஆனால் அப்போது எந்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் கொச்சியில் வீட்டில் ஆறு கிராம் கஞ்சா வைத்திருப்பதாக போலீஸ் வேடனை கைது செய்தது. பின்பு ஜாமீனில் வெளியானதும் சிறுத்தை-பல் அணிந்திருந்ததாக மற்றொரு வழக்கில் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்பு அது ஒரு ரசிகர் தனக்கு பரிசாக வழங்கியதாக கூறிய பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதன் பின்னர் பாலக்காடு நகராட்சியின் பாஜக கவுன்சிலர் ஒருவர் வேடனின் இசை ஆல்பம், பிரதமர் மோடியை அவமதிப்பதாகவும், சாதிப் பிரிவினையை ஊக்குவிப்பதாகவும் புகார் கொடுத்தார். இதையடுத்து வலது சாரி ஆதரவாளர்கள் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினர். ஆனால் அவருக்கு ஆதரவு குரல்கள் கேரளாவைத் தாண்டி தமிழ்நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்ததுது. அரசியல் தளங்களிலும் ஆதரவு பெருகியது. மேலும் சமூக வலைதளங்களில் வேடன் தொடர்பான வீடியோக்கள் வைரலாகி ட்ரெண்டானது. இதன் மூலம் வேடன் இன்னமும் பிரபலமடைந்தார். மேலும் அவரது அடுத்த புராஜெக்டுகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழில் விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா படத்தை மையப்படுத்தி புதிதாக உருவாகும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் வேடன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், வேடன் தன்னை 2021ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் உறவு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னை போன்றே மற்றொரு பெண்ணும் வேடனுடன் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்த பின்னர் புகார் கொடுக்க முன் வந்ததாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் கோழிக்கோடு, திருக்காக்கரா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.