இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ், ஆர்யா நடிப்பில் ‘வேட்டுவம்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. அந்த வகையில் விழுந்தம்பாடி கிராமத்தில் நேற்று நடந்த படப்பிடிப்பின் போது கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரை இயக்கிய ஸ்டன்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்பு சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளின் கீழ் பா.ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் மீது நாகை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.