உண்மை சம்பவ அடிப்படையில் தொடர்ந்து பல்வேறு படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு கொலை வழக்கு படமாக எடுக்கப்படவுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் என்ற இளம் தம்பதி கடந்த மே மாதம் 22ஆம் தேதி மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது திடீரென்று காணாமல் போனார்கள். பின்பு பல நாட்கள் கழித்து ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 

பின்பு அவரது மனைவி சோனம் காசிப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்பு அவரிடம் நடந்த முதற்கட்ட விசராணையில், இவர் வேறொரு நபரை காதலித்து வந்ததால் அவருடன் வாழ விரும்ப ஆசைப்பட்டதால், கூலி படை வைத்து கணவரை கொன்றுள்ளது, தெரிய வந்தது. ஆனால் சோனமின் குடும்பத்தினர் அவர் ஒரு அப்பாவி எனக் கூறுகின்றனர். இதனால் ராஜா ரகுவன்ஷியை உண்மையில் யார் கொலை செய்தார் என்ற மர்மம் நீடித்து வருகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சோனம், அவரது காதலர் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். 

தேனிலவு சென்று கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிகுள்ளாக்கியது. இந்த சம்பவத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் ‘ஹனிமூன் இன் ஷிலாங்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இதில் ராஜா ரகுவன்ஷியின் திருமணம், காவல் துறை விசாரணை, சோனம் மற்றும் அவரது காதலர் கைது உள்ளிட்டவைகளை மையப்பட்டுத்தி எடுக்கடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பாலிவுட் இயக்குநர் எஸ்.பி. நிம்பாவாத் இயக்கவுள்ளார். அவர் கூறுகையில், “இந்த படம் மூலம் இது போன்ற துரோக சம்பவங்கள் நிறுத்த பட வேண்டுமென்ற மெசேஜை மக்களுக்கு சொல்ல விரும்புகிறோம். படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு இந்தூரிலும், மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பு மேகாலயா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தவுள்ளோம்” என்றார்.  

படம் தொடர்பாக ராஜா ரகுவன்ஷியின் சகோதரர் ஒருவர் கூறுகையில், “படத்திற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். என் சகோதரனின் கொலையை பெரிய திரையில் கொண்டு வராவிட்டால், யார் சரியானவர்கள், யார் தவறானவர்கள் என்பது மக்களுக்கு தெரியாமல் போய்விடும்” என்றார்கள்.