Skip to main content

'ஜவான்' படம் விஜயகாந்த் படத்தின் கதை - அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

Film 'Jawaan' is the story of Vijayakanth's film - Complaint against Atlee in Producers association

 

தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். குறிப்பாக முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்து பலரது கவனத்தைப் பெற்றார்.

 

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

ad

 

இந்நிலையில் 'ஜவான்' படத்தின் கதை விஜயகாந்த் நடித்த 'பேரரசு' படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக வருகிற 9ஆம் தேதிக்கு மேல் விசாரணை நடத்தத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

 

ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படம் 'மௌன ராகம்' படத்தைப் போல் இருப்பதாகவும் பின்பு 'மெர்சல்' படம் 'மூன்று முகம்' படம் போல் உள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 'ஜவான்' படத்திற்கும் இந்த சர்ச்சை எழுந்துள்ளதால் கோலிவுட்டில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்கள் தான் ஒரிஜினல்” - வைரல் வீடியோ குறித்து ஷாருக்கான் - மோகன்லால்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sharukhan mohan lal conversation about mohan lal viral dance video

கேரளா கொச்சியில் சமீபத்தில் நடந்த ஒரு விருது நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொண்டார். அதில் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்திலிருந்து ‘ஹுக்கும்...’ பாடலுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து ‘ஜிந்தா பந்தா...’ பாடலுக்கும் மேடையில் நடனமாடினார். அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மோகன்லால் ரசிகர்களோடு இணைந்து ரஜினி ரசிகர்களும் ஷாருக்கான் ரசிகர்களும் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்தனர். 

இந்த நிலையில் ஷாருக்கான் மோகன்லால் நடன வீடியோ குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நீங்கள் ஆடியதில் சரிபாதி அளவு நன்றாக நடனமாடியிருப்பேன் என விரும்புகிறேன். லவ் யூ சார். உங்கள் வீட்டு டின்னருக்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா” எனக் குறிப்பிட்டிருந்தார். 

ஷாருக்கான் பதிவிற்கு தற்போது மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “டியர் ஷாருக்கான். உங்களைப் போல் யாராலும் நடனமாட முடியாது.  உங்களது ஒப்பற்ற  உன்னதமான ஸ்டைலில் நீங்கள் தான் ஒரிஜினல் ஜிந்தா பந்தா. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. வெறும் டின்னர் மட்டும் தானா? பிரேக் ஃபாஸ்ட் கூடாதா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த படம் 'ஜவான்'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்து நல்ல வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் டங்கி படத்தில் நடித்திருந்தார். அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மோகன்லால், பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ மற்றும் தருண் மூர்த்தி இயக்கத்தில் அவரது 360வது படத்தில் நடித்து வருகிறார்.   

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.