சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'டான்'. 'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. கலகலப்பான கல்லூரி திரைப்படமாக வெளிவந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் இப்படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளனர். இப்பட வெற்றியை படக்குழு சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடியது.
இந்நிலையில் 'டான்' திரைப்படத்தின் வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான 'டாக்டர்' படமும் ரூ.100 கோடிவசூலித்தது குறிப்பிடத்தக்கது.