
இந்தியாவில் நீண்ட காலமாக மகளிருக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2005-ஆம் ஆண்டில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி குடும்ப சொத்துகளில் பெண்களுக்கு சமபங்கு உண்டு என்பது சட்டமானது. ஆனாலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு பிறந்த பெண்களுக்கு மட்டும்தான் குடும்ப சொத்துகளில் பங்கு உண்டு என்றும், வாரிசுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு முன் குடும்ப தலைவர் இறந்திருந்தால், அவரது சொத்தில் மகள்களுக்கு பங்கு இல்லை என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.
வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்க இத்தகைய வாதங்கள் முட்டுக்கட்டையாக இருந்தன. இதனையடுத்து இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்ப சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பிக்கு பல்வேறு பிரபலங்கள் வரவேற்பளித்து பாராட்டி வரும் நிலையில் பாலிவுட் நடிகரும், இயக்குனருமான ஃபர்ஹான் அக்தர் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...
“இது ஒரு மைல்கல். தீர்ப்பில், மகள் தனது பெற்றோரின் சொத்துக்கு நிபந்தனையற்ற உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. இது மகள்களுக்கு பிறப்பால் பெற்றோரின் சொத்துக்கான பரம்பரை உரிமையை வழங்குகிறது. பாலின சமத்துவத்திற்கான அணிவகுப்பில் இது ஒரு சிறந்த நாள்" என கூறியுள்ளார்.