லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் முன்னோட்ட விழா, சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து ஹைதராபாத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் என படத்தின் புரொமோஷன் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தை ஆமீர் கான் வட மாநிலங்களில் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தை விநியோகம் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதை அவரது தரப்பு மறுத்திருந்தது. இதனிடையே படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் குழந்தைகளுடன் தியேட்டருக்கு வர வேண்டாம் என திரையரங்க நிர்வாகங்கள் பார்வையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த நிலையில் படத்தில் பிற மொழி நடிகர்கள் இருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் நல்ல ஓபனிங் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தாண்டு அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்களில் கூலி இப்போதைக்கு இருக்கிறது. இதனால் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள். இந்த சூழலில் கூலி படத்தின் ஆன்லைன் முன் பதிவிற்காக சில ரசிகர்கள் காத்திருக்க ஆஃப் லைன் முன்பதிவிற்காகவும் சில ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் கேரளாவில் தற்போது ஆஃப்லைனுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அங்கு திருச்சூர் பகுதியில் இருக்கும் முன்பதிவு தகவல் அறிந்து ஒரு திரையரங்கின் கேட்டின் முன் ரசிகர்கள் குவிந்திருக்க, கேட் திறந்தவுடன் முண்டியடித்து டிக்கெட் பெற ஓடும் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.