‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் நெய்வேலி பகுதியில் படமாக்கப்பட்டன. அதற்கான படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்தபோது, அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. பின்னர், நடிகர் விஜய் வருமான வரித்துறை அதிகாரிகளின் காரிலேயே சென்னை அழைத்துச் செல்லப்பட்டார். சோதனையின் முடிவில் தன்னுடைய வருமானம் குறித்து உரிய ஆதாரங்களை அளித்துவிட்டு மீண்டும் நெய்வேலி திரும்பினார்விஜய். அப்போது அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே திரண்டிருந்தனர். அன்றைய படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய விஜய், அங்கே நின்ற வாகனத்தின் மீது ஏறி, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகின்றனர்.