mALAVIKA

Advertisment

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கடந்த ஐந்தாம் தேதி கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. தினசரி அவரது மகனும் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வீடியோ வெளியிடுகிறார். நேற்று பிரபலங்கள் மற்றும் மக்கள் பலரும் எஸ்.பி.பி-க்காக மாலை ஆறு மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

இந்நிலையில் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று பரவியது பாடகி மாளவிகாவினால்தான் என்று சமூக வலைதளங்களில் பலரும் வதந்தி பரப்பி வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “அந்த இசை நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு முன்னதாகவே எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக ஒரு போலி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பல்வேறு பிரபல பாடகர்களுடன் எஸ்.பி.பி. அவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 30 மற்றும் 31 அன்று நடைபெற்றது. இரண்டாம் நாளில் 4 பாடகர்களில் ஒருவராக நானும் கலந்து கொண்டேன். ஒரு வேளை எனக்கு அப்போது தொற்று ஏற்பட்டிருந்தால் என் மூலம் என்னோடு கலந்து கொண்ட பாடகர்களுக்கும், என்னோட மேக்கப் ரூமில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் பரவியிருக்க வேண்டும். என் சகோதரியும் என்னோடு பாடியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

என் சகோதரி அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் எப்படி என்னோடு பாடியிருக்கமுடியும். மேலும் என் கணவரும் கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்த்து வருகிறார். என் குழந்தை மற்றும் பெற்றோரின் பாதுகாப்பு கருதி நானும் எங்கும் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே முதன்முதலாக வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பாலு சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னும் சிலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு தொற்று இல்லை. என் டிரைவருக்கும் கூட தொற்று இல்லை.

எனவே தயவு செய்து போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். இது போன்ற வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.