
சமீபத்தில்தான் துருவா சர்ஜாவின் சகோதரர் சிரஞ்சீவி சர்ஜா தீடிரென காலமானார். இச்செய்தி தென்னிந்தியத் திரையுலகத்தினரையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், நடிகர் துருவா சர்ஜாவுக்கும் அவருடைய மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் 2012ஆம் ஆண்டு 'அதூரி' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் துருவா சர்ஜா. அதற்குப் பிறகு சில படங்களில் நடித்தவர், இறுதியாக 'பொகுரு' படத்தில் நடித்துள்ளார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ராஷ்மிகா மந்தானா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ள துருவா சர்ஜா, “எனக்கும் என் மனைவிக்கும் லேசான அறிகுறிகளுடன் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் நலமாகத் திரும்புவோம் என்று எனக்குக் கண்டிப்பாகத் தெரியும். எங்கள் அருகாமையில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஜெய் ஆஞ்சநேயா” என்று தெரிவித்துள்ளார்.