/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/210_20.jpg)
அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதில் இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வராத நடிகர் வடிவேலுக்கு வீட்டிற்கே சென்று டாக்டர் பட்டத்தைக் கொடுத்துள்ளனர். இந்த விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். மேலும் இந்த அமைப்பு நீதிபதி தலைமையில் இயங்கி வருவதாகச்சொல்லப்படும் நிலையில், இதற்கு முன்பாக ராகவா லாரன்ஸ், டி.இமான் உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கௌரவ டாக்டர் பட்டங்கள் போலியாக வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாகக் கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டது.
நீதிபதியிடம் அண்ணா பல்கலைக்கழக வளாகம் என்று சொல்லி அவரை ஏமாற்றியுள்ளனர். எங்களிடம் அவர் எழுதிய கடிதம் இருப்பது போல் காண்பித்து எங்களை ஏமாற்றியுள்ளனர். நீதிபதியிடம் இருந்து கடிதம் வந்துள்ளதால் எங்கள் நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு பேரிடமும் முறையான ஆவணங்கள் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம்.அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். இது போன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம். இனிமேல் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என முடிவெடுத்துள்ளோம்." என்றார்.
இதன் மூலம் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளது போலி எனத்தெரியவந்துள்ளது. மேலும், நீதிபதி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை தனியார் அமைப்பு ஏமாற்றியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)