
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ப்ரித்விராஜ். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படம் கேரளா மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் வெற்றிபெற்றது. தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் இப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ப்ரித்விராஜ் தனது ஆறு வயது மகளின் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதனைத் தொடர்ந்து, மர்ம நபர் ஒருவர் ப்ரித்விராஜ் மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் அந்த புகைப்படங்களையும், பழைய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் ப்ரித்விராஜ் மற்றும் அவரது மனைவி சுப்ரியா இருவரால் நிர்வகிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் போலியானது என்று ப்ரித்விராஜ் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், “இந்த போலி பக்கம் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த பக்கத்தை நாங்க நிர்வகிக்கவில்லை. ஒரு ஆறு வயது குழந்தைக்கு சமூக வலைதளப்பக்கத்தை உருவாக்குவதற்கான எந்த தேவையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. அவர் வளர்ந்ததும் அது குறித்து அவர் முடிவு செய்து கொள்வார். எனவே இது போன்றவற்றை நம்ப வேண்டாம்” என்றார்.