மலையாளத் திரையுலகில் மிரட்டலான நடிப்பு மூலம் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் ஃபகத் ஃபாசில். மலையாளத்தை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கிலலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் மாரீசன் படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனம் மட்டுமே பெற்றது. இதையடுத்து மலையாளத்தில் ‘ஓடும் குதிரா சாடும் குதிரா’ என்ற படம் அடுத்து வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் அதன் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ஒரு பேட்டியில் ஆஸ்கர் வென்ற இயக்குநர் அலெஜான்ட்ரோ கோன்சலஸ் இனாரிட்டு, தன்னை ஒரு படத்திற்கு அணுகியதாக பகிர்ந்த கொண்டார். அவர் கூறுகையில், “அலெஜான்ட்ரோ இனாரிட்டுவிடம் வீடியோ கால் பேசினேன். ஆனால் அது அடுத்தக் கட்டத்திற்கு போகவில்லை. அதனால் அவர் என்னை நிராகரித்துவிட்டார் என அர்த்தம் கிடையாது. என்னுடைய உச்சரிப்பு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் உச்சரிப்பை சரி செய்ய மூன்று அல்லது நான்கு மாதங்கள் அமெரிக்காவில் தங்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு பணம் தர மாட்டோம் என்றும் சொன்னார். ஒரு உச்சரிப்பிற்காக இவ்வளவு சிரமம் எடுப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதனால் அந்த வாய்ப்பை நான் தவிர்த்துவிட்டேன். இல்லையென்றால் ஓடோடி போய் நடித்திருப்பேன்.
அது போக வீடியோ காலில் பேசும் போது தான், அவரும் நாம் தேடும் நபர் இவர் இல்லை என உணர்ந்தார். இது போன்ற மீட்டிங்கால் நிறைய பட வாய்ப்புகளை நான் இழந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எல்லா மேஜிக்கும் மலையாளத்தின் தான் நடந்தது. அதனால் எதிர்காலத்தில் எதாவது, மாற்றங்கள் நடந்தால், அது மலையாளத்தில் இருந்து தான் வர வேண்டும் என நான் விரும்புகிறேன். அதனால் நான் கேரளாவை விட்டு வெளியேற விரும்பவில்லை” என்றார். இதில் அலெஜான்ட்ரோ இனாரிட்டு, எந்த படத்திற்காக தன்னை அழைத்தார் என ஃபகத் ஃபாசில் தெரிவிக்கவில்லை. ஆனால் அப்படம் டாம் க்ரூஸை வைத்து அலெஜான்ட்ரோ இனாரிட்டு இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படமாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் யூகிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.