வடிவேலு - ஃபகத் ஃபாசில் இருவரும் ‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தை ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. பின்பு ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. வடிவேலு ஃபகத் ஃபாசில் இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில் என்ன நடக்கிறது என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதையடுத்து படத்தின் ‘மாரீசா’ பாடல் வெளியானது. இப்படம் நாளை(25.07.2025) வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், இப்படம் தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்தில் பேட்டி கொடுத்த ஃபகத் ஃபாசில், வடிவேலு குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “மாரீசன் படக் கதையை நான் ஒரு மலையாள படத்திற்கு தான் கேட்டிருந்தேன். கதை கேட்ட பிறகு நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட அடுத்தக்கட்ட விஷயங்கள் நடந்தது.அப்போது ஒரு கட்டத்தில் வடிவேலு மாதிரி ஒரு நடிகர் வேண்டும் என நானும் இயக்குநரும் யோசித்தோம். பின்பு படத்தின் தயாரிப்பாளர் வந்தார். அவர் தமிழ் படத் தயாரிப்பாளர் என்பதால் ஏன் இந்த படத்தை தமிழில் பண்ணக்கூடாது என்றார். நானும், தமிழில் பண்ண வேண்டும் என்றால் அது வடிவேலுவுடன் தான் என கண்டிஷன் போட்டேன். அதன் பிறகு தான் வடிவேலு படத்திற்குள் வந்தார். ஏற்கனவே நாங்கள் ஒரு காமெடி படம் பண்ண வேண்டும் என பேசியிருந்தோம். அது இந்த படத்தில் சரியாக அமைந்தது. இந்த படத்தில் ஒரு புதுவிதமான வடிவேலுவை பார்ப்பீர்கள்” என்றார்.