Skip to main content

20க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி குவித்த குறும்படம்! 

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
shortfilm

 



நடிகர் விஷால், இயக்குனர்கள் பா. ரஞ்சித்,  கார்த்திக் சுப்புராஜ், ராஜுமுருகன், விஜய்மில்டன், அருண்ராஜா காமராஜ், ‘மூடர் கூடம்’ நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர்  “எது தேவையோ அதுவே தர்மம்” குறும்படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

 

சமகால மக்களின் வாழ்வியல் பிரச்சனையில் உள்ள நியாய தர்மத்தின் அடிப்படையை மையமாக வைத்து உருவாகும் படங்கள் மக்களின் ஏகோபித்த வரவேற்பை கண்டிப்பாக பெரும். அந்த வகையில் உருவாக்கப்பட்ட குறும்படம்  ''எது தேவையோ அதுவே தர்மம்''.


விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும், 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றுள்ள இப்படைத்தை  து.ப. சரவணன் இயக்கியுள்ளார். "எது தேவையோ அதுவே தர்மம்" என்கிற இந்த வசனம் 'ஆரண்ய காண்டம்' படத்தில் முதலில் இடம்பெறும் வசனமாகும். அது பிடித்துப்போய் அதையே தலைப்பாக்கி இருக்கும் இயக்குனர் து.ப.சரவணன் இக்குறும் பட அனுபவம் பற்றி கூறும்போது....

 

"நான் திரையுலகில் எட்டு ஆண்டுகளாக இருக்கிறேன். பாலாஜி இயக்கிய 'குள்ளநரிக்கூட்டம்', கணேஷ் விநாயக் இயக்கிய 'தகராறு', 'வீரசிவாஜி' மற்றும் ‘நிசப்தம்’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். பிறகு சினிமா கனவோடு இருந்த நான், என்னை நிரூபிக்க முதலில் குறும்படம் ஒன்றை எடுப்பது என்று முடிவு செய்து, இதற்கான கதையை தயார் செய்தேன். அப்போது உருவானதுதான் இந்த "எது தேவையோ அதுவே தர்மம்" என்ற குறும்படத்தின் கதை.

 

இப்படத்தை தயாரிக்க மூன்று லட்ச ரூபாய் வரை தேவைப்பட்டது. பண உதவி தேவைப்பட்டதால் வெளிநாட்டிலிருந்த என் தங்கை கணவர் சந்திரசேகரிடம் கதையை அனுப்பி, பிடித்திருந்தால் உதவி செய்யுங்கள் என்று உதவி கேட்டேன். அவரும் கதையைப் படித்து விட்டு உடனே ஐம்பதாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி, படப்பிடிப்பை தொடங்க சொன்னார். அப்படி தொடங்கப்பட்டதுதான் இந்த படம்.

 

இப்படத்தின் நாயகன் ஸ்ரீநி 'தோழர்', 'பொம்ம வெச்ச பென்சில்', 'நானும் இந்த உலகத்துல தான் இருக்கேன்' போன்ற குறும் படங்களிலும், 'சூப்பர் டூப்பர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர். இவர் தற்போது 'வெல்வெட் நகரம்' என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் மூலம்தான் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஆகியோர் அறிமுகமானார்கள். உலக அரங்கில் திரையிடப்பட்டு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைக் குவித்த 'டு லெட்' படத்தின் கதாநாயகியாக நடித்தவர்தான் இந்த ஷீலா. அதுமட்டுமல்ல அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'திரௌபதி' படத்திலும் நாயகியாக நடித்தவர்.

 

படப்பிடிப்பின்போது கதாநாயகன் ஸ்ரீநி மற்றும் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கொடுத்த ஒத்துழைப்பை மறக்கமுடியாது. இப்படத்தில் நடித்திருக்கும் சிறுவன் கொடுத்த ஒத்துழைப்பும் மறக்க முடியாது. அவனிடம் கதையை கொடுத்தபோது மறுநாளே வசனங்களை மனப்பாடம் செய்து காட்டினான். அப்படி ஒரு ஆர்வம் ஈடுபாடு.

 

ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன் இல்லாவிட்டால் இப்படிப்பட்ட காட்சி அமைப்புகள் படத்தில் வந்திருக்காது. அவரின் ஸ்மார்ட்டான வேலை செய்யும் யுக்தி எங்கள் வேலையை சுலபமாக்கியது. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஆர்ட் டைரக்டர் சூர்யாவின் பங்கு அளப்பரியது. இந்த படத்திற்காக நாங்கள் பல வீடுகளை தேடி பார்த்தும் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் எந்த வீடும் திருப்திகரமாக அமையவில்லை. அப்போதுதான் எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் ஆர்ட் டைரக்டர் சூர்யா தனது வீட்டையே எங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து படப்பிடிப்புக்குக் கொடுத்து உதவி செய்தார். அவர் நல்ல திறமைசாலி.

 

இசையமைப்பாளர் தீசன், கதைக்கான உணர்வை இசையில் கொண்டுவந்து பார்ப்பவரை கண்கலங்க வைத்திருக்கிறார். அதேபோல் காட்சிகளை தொய்வின்றி எடிட் செய்துள்ளார் எடிட்டர் தமிழ்க்குமரன். இந்தக் கூட்டணி இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது" என்கிறார் இயக்குனர் சரவணன்.

 

இப்படத்திற்கு இதுவரை 20 விருதுகள் கிடைத்துள்ளன. தமிழ் ஸ்டுடியோ வழங்கும் பாலுமகேந்திரா நினைவு விருது, இப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்கு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் அங்கே பார்வையாளர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி பெஸ்ட் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகையும் இப்படத்திற்கு கிடைத்தது. குஜராத் அகமதாபாத்தில் நடந்த 3வது சித்ரபாரதி திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதுடன், ரூ.50 ஆயிரம் ரூபாய் பரிசும் நாயகன் ஸ்ரீநிக்கு கிடைத்தது. அதேபோல் இண்டோ ரஷ்யன் ஃபிலிம் பெஸ்டிவல், காஸ்மோ ஃபிலிம் பெஸ்டிவல் ஆகியவற்றிலும் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இப்படி சுயாதீன பட விழா சென்னை 2020, பபாஸியின் புத்தக கண்காட்சி குறும்பட விழா என்று  இதுவரை 20 விருதுகள் இந்த குறும்படத்திற்கு கிடைத்துள்ளன. இக்குறும்படத்தில் ஸ்ரீநி, ஷீலா ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து லிங்கேஷ், தாஸ், நாகராஜன், ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

சுமார் அரை மணி நேரம் ஓடும் இக்குறும்படத்தை செகண்ட் காட் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் து.ப சரவணன், ப்ளாட்பார்ம் புரொடக்ஷன்ஸ் சார்பாக நாயகன் ஸ்ரீநி, க்ளிக் அண்ட் ரஷ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் வினோத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இன்று மாலை ஆறு மணிக்கு பல்வேறு திரை பிரபலங்கள் இந்த குறும்படத்தை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட் vs மோலிவுட்; எழுத்தாளர் ஜெயமோகனுக்கு சரமாரி கேள்வி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Kerala's famous writer unni asked writer Jeyamohan

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது குணா குகை. இந்தக் குகையைக் கண்டறிந்த ஆங்கிலேயேர்கள் இதற்கு டெவில் கிச்சன் என பெயர் சூட்டினர். மிகவும் ஆபத்தான இந்தக் குகையில், கடந்த 33 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த குணா என்ற திரைப்படம் உருவானது. அதன் பிறகே, டெவில் கிச்சனாக இருந்த இந்தக் குகை, குணா குகை எனப் பெயர் பெற்றது.

இந்தக் குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் `மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்தத் திரைப்படம் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் எனப் பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த அவர், அதனை விமர்சிக்கும் விதமாக ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி. ஆனால் 'யானை டாக்டர்' எழுதியவன் என்கின்ற முறையில் இதை எழுத வேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துகள் வழியாக நேற்று 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. என அந்தக் கட்டுரையை ஆரம்பித்த எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் இந்தப் பழக்கம் உள்ளது. இவர்கள் சுற்றுலா மையங்களுக்கு மட்டுமல்ல அடர் காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடி..குடி..குடி.. அவ்வளவுதான். எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும். இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். என அந்தக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கேரளா மட்டுமல்லாது தமிழ் சினிமா துறையில் இருந்தும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் பலர் சமூக வலைத்தளங்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், கேரளாவின் பிரபல எழுத்தாளரான உண்ணி, ஜெயமோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மலையாள மனோரமாவில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயமோகன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதில் அவ்வளவு விஷமத்தனம் உள்ளது. குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற வாதம் மேட்டுமைத்தனத்தின் வாதமே. மலையாளிகளில் கள்ளிறக்கும் தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி, மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்க, இதனை ஒதுக்கப்பட்டவர்களின் நாகரிகமில்லாத களியாட்டமாகவே சிலர் பார்க்கிறார்கள். இந்த ஆதிக்க உணர்வுதான் ஜெயமோகன் வாதத்தின் பின் இருக்கும் உண்மை.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், அடித்தட்டு வாழ்க்கை வாழும் நண்பர்களின் கதை. படத்தில் அவர்கள் குடிகாரர்கள் என்றும் பொறுக்கிகள் என்றும் காட்டினாலும், ஆபத்தான கட்டத்தில் தனது நண்பனைக் காப்பாற்றிய மனிதாபிமானம் இந்த ஆசாமி கண்ணில் ஏன் படவில்லை. இயற்கையின் சீற்றத்தால், பிரச்சனை ஏற்பட்ட போது, மலையாளிகளும், தமிழரும் பரஸ்பரம் கைநீட்டித் தொட்டுக் கொண்டார்கள். அவர்களில் குடிகாரர்களும் இருந்தார்கள் எனவும் சாடியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அந்தக் கட்டுரையின் இறுதியில் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதில், கேரளக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் செல்லப் பயமாக இருக்கிறதா?... உங்களுக்குள் இருக்கும் கிழவனுக்கு இளைஞர்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு?... உங்களைப் போல கீழ்மைக்கு அடிமையாகாமல் மலையாளி இளைஞர்கள் தங்களை நிரந்தரமாக நவீனப்படுத்திக் கொள்வதாலா?... கேரளத்துக்கு கதை எழுத வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதலா இந்த வசை மாரி?... உள்ளிட்ட காட்டமான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் இப்படி விமர்சனம் செய்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஆஸ்கர் விழாவில் கவனம் ஈர்த்த பழங்குடியின தம்பதியின் வாழ்க்கை

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

first tamil movie gets to oscars award

 

உலக அளவில் திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது விழா இந்தாண்டும் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. ஆஸ்கர் விருது பெறுவது என்பது ஒவ்வொரு கலைஞனின் கனவு எனக் கூறலாம். இந்தக் கனவு பலருக்கும் கனவாகவே தற்போது வரை இருந்து வருகிறது. ஆனால் அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறது 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. ஆவணக் குறும்படமாக எடுக்கப்பட்ட இப்படம் தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், பெள்ளி என்ற இரு பழங்குடிகளைப் பற்றிய கதை. 

 

இந்த நிலையில் இப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையில் வசித்து வரும் இயக்குநர் கார்த்திகி ஊட்டியைப் பூர்விகமாகக் கொண்டவர். இந்த ஆவணப்படத்தை உருவாக்குவதற்காக அந்த பழங்குடியின மக்களுடன் ஐந்து ஆண்டுகள் பயணித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆஸ்கருக்கு முன்னதாக ஐடிஏ ஆவணப்பட விருதுகள் (IDA Documentary Awards), ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது (Hollywood Music in Media Awards) உள்ளிட்ட சர்வதேச விருதுகளில் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தது. 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவில் விருது பெற்றிருந்தாலும் பெரிய படத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து தெய்வமகன், நாயகன், அஞ்சலி, தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ், ஹேராம், விசாரணை மற்றும் கடைசியாக அனுப்பப்பட்ட கூழாங்கல் என பல்வேறு படங்களை அனுப்பியிருந்தாலும் எதுவுமே நாமினேஷன் பட்டியலில் கூட இடம் பெற்றதில்லை. இதற்கு முன்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பெற்றிருந்தாலும் தமிழ் அல்லது இந்திய படைப்புகளுக்காக பெற்றதில்லை. 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கிலப் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.