Advertisment

"யார் தடுத்தாலும் சொன்ன தேதியில் வெளியிடுவேன்..." - வைரலாகும் ‘எனிமி’ பட தயாரிப்பாளரின் குரல் பதிவு!

vishal

Advertisment

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதே தினத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தை வினோத் தயாரித்துள்ளார். இந்நிலையில், ‘அண்ணாத்த’ திரைப்படம் திரைக்கு வருவதால் தன்னுடைய படத்திற்கு போதிய திரையரங்கு அளிக்கப்படவில்லை எனகுற்றம்சாட்டி தயாரிப்பாளர் வினோத் ஒரு குரல் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அந்தக் குரல் பதிவில், "'எனிமி' என்ற படத்தை நான் தயாரித்துள்ளேன். வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுவருகிறோம். பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்சனை என்னவென்றால் ஒரு பெரிய படம் வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல் வருகிறது. அது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால், என்னுடைய சங்கத்தில் நான் கேட்க வேண்டிய ஒரு விஷயம், ஹாட் ஸ்டார் தளத்திலிருந்து எனக்குச் சலுகைகள் கொடுக்கப்பட்டும் திரையரங்கத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டுத் திரையரங்குகளுக்கு வந்திருக்கிறேன். அதற்கான முழு ஆதரவையும் உங்களிடம் தாழ்மையுடன் கேட்கிறேன்.

சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயமா என்று கேட்டால், கண்டிப்பாக இல்லை. தீபாவளி போன்ற ஒரு பெரிய விழாவுக்கு 2 படங்கள், நான்கு நாட்கள் ஓடினாலே 2 படங்களுக்குமே போதுமான அளவு ஷேர் வந்துவிடும். என்னதான் ஒரு படம், ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரின் படமாக இருந்தாலும், 900 திரைகளிலும் அந்த ஒரு படத்தை ஓட்டி அவர்களால் நல்ல பெயர் வாங்க முடியாது. இது அனைவருக்குமே தெரிந்த உண்மை. பெரும்பாலான திரையரங்குகளில் 40 சதவீதத்துக்கு மேல் புக்கிங் வராது. அப்படி அந்த ஒரு படத்தை மட்டுமே அனைத்துத் திரையரங்குகளிலும் ஓட்டி அனைவரும் வந்து பார்த்தால் 150 கோடி ரூபாய் ஷேர் வர வேண்டும். இதுவரை அப்படி நடந்ததாக வரலாறு கிடையாது. இதற்கு என்னுடைய சங்கம் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். எனக்கு அதிகம் வேண்டாம். 250 திரையரங்குகள் போதும்.

Advertisment

என் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த 250 தியேட்டர்களில் நான் எதிர்பார்க்கும் அந்த சிறிய ஷேரை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அந்த 250 திரையரங்குகளும் எல்லா ஏரியாக்களிலும் கலந்து வரும்படி எனக்கு உங்கள் ஆதரவு வேண்டும். இது நடக்கவில்லை என்றால் அதற்கு எதிராக நான் கட்டாயமாகப் போராடுவேன். அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் பேசுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் நேர்மையாக ஒரு தொழில் செய்கிறோம். ஒரு சார்பு பட்சமும், இந்தக் கஷ்டமும் வேறு யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காவே நான் பேசுகிறேன். இந்தத் தருணத்தில் எல்லோரும் ஒன்றாக இருந்தால்தான் இதை நாம் எதிர்கொள்ள முடியும். என்ன இருந்தாலும் நான் தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்வேன். எனக்கு 250 தியேட்டர்கள் கிடைக்குமாறு உதவும்படி என் சங்கத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்"எனப் பேசியுள்ளார்.

முன்னதாக, இதே பிரச்சனை காரணமாக சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

actor vishal enemy
இதையும் படியுங்கள்
Subscribe