இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய ஆளுமையாக திகழும் ரஜினிகாந்த், தனது 50வது ஆண்டுகாலத் திரைபயணத்தை நிறைவு செய்யவுள்ளார். இவர் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வரும் 15ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை கடக்கிறது. இன்று வரை தனது ஸ்டைலான நடிப்பாலும், எனர்ஜியுடன் தோன்றும் வசீகரத்தாலும், பஞ்ச் வசனங்களாலும் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை(14.08.2025) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு திரை பிரபலங்களைத் தாண்டி அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கேப்டன் இருந்திருந்தால் நிச்சயமாக ரஜினிகாந்த்திற்கு ஐம்பதாவது ஆண்டு விழா விமர்சையாக கொண்டாடி இருப்பார். திரை உலகில் உள்ள சங்கங்கள் எல்லாம் இணைந்து, ரஜினிக்கு மிகப்பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பொன்விழா ஆண்டில் அவர் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் டாப் நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களோடு சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகிறது. ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தையொட்டி இப்படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும்
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 13, 2025
தனித்துவமான நடிப்பாலும்,
50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர்
திரு. @rajinikanth அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள… pic.twitter.com/6DXVh2xakm