/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/130_28.jpg)
பிரபல திரை பிரபலம் மனோபாலா (69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனை குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றுமறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட நபராக திகழ்ந்தவர். இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வட பழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான மனோபாலா உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும், தலைமை கழக பேச்சாளருமான மனோ பாலாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமமுக-வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)