/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/174_21.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பாராட்டினர். இருப்பினும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் படம் சுத்த ஃபிளாப் என விமர்சித்திருந்தார்.
இப்படம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு, "எங்களுடைய இயக்கம் வேறு. அவருடைய இயக்கம் வேறு. நான் எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் அதை பார்த்திருக்கும் பட்சத்தில் கருத்து சொல்வேன். மாமன்னன் படம் பார்க்கவில்லை. பார்த்தால் தான் கருத்து சொல்ல முடியும்" என்றார். இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்து வரும் அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாமன்னன் படம் பற்றி பேசினார்.
அவர் பேசுகையில், "நாட்டில் விலைவாசி ஏறிப்போச்சு. மாமன்னன் படம் ஓடுனா என்ன,ஓடலனா என்ன.. இதுவா நாட்டு மக்களுக்கு தேவை?இதுவா வயிற்றுப்பசியை போக்கப்போகிறது. படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரிய எழுச்சி ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துறாங்க. அது பொய். நான் முதமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆளுநர் உத்தரவுப்படி அன்றைய சட்டப்பேரவை தலைவர் தனபால்பெரும்பான்மையை நிரூபிக்கும்படி சட்டமன்றத்தை கூட்டினார். ஆனால், அவரை இருக்கையில் இருந்து இழுத்து, மைக்கை கீழே தள்ளி பெஞ்சஉடைச்சு பெரும் ரகளையில் ஈடுபட்டது திமுக. ஆனால் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது அதிமுக" என சற்று கோபமாகப் பேசினார்.
அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றிப் பேசியிருக்கும் இப்படம் பல நிஜ சம்பவங்களை நினைவுபடுத்துவதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தைஅப்போது மாவட்டச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)