தொழிலதிபர் ஃபனீந்திர சர்மா என்பவர் திரை பிரபலஙகள், சோசியல் மீடியா பிரபலங்கள் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதாக புகார் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்ளிட்ட 29 நபர்கள் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரகாஷ் ராஜ், ரானா டகுபதி தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்திருந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 27 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பின்பு சம்பந்தப்பட்ட நபர்களின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கை திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.