Dushara Vijayan

ஸ்ரீநாத் இயக்கத்தில் மைம் கோபி, துஷாரா விஜயன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள அன்புள்ள கில்லி திரைப்படம் வரும் 6ஆம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிலையில், நடிகை துஷாரா விஜயனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

Advertisment

"இந்தப் படத்தில் அன்விதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். சார்பட்டா மாரியம்மாவுக்கும் அன்விதாவுக்கும் கொஞ்சம்கூட தொடர்பே இருக்காது. வட இந்திய பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சார்பட்டாவுக்கு முன்பே என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய ஸ்ரீநாத், பாலு சார், சாகர் சார் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படம். எனக்கு நாய் என்றாலே பயம். இந்தப் படம் அந்தப் பயத்தை போக்கியது. இந்தப் படத்தில் அமிகோ என்று ஒரு நாய் நடித்திருக்கிறது. படம் பார்த்த அனைவருக்குமே அமிகோ மாதிரி நாமும் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். அமிகோவோடு சேர்ந்து மேலும் நான்கைந்து நாய்கள் நடித்துள்ளன. செட்டில் எங்களை நடிக்க வைக்கத்தான் இயக்குநர் மிகவும் சிரமப்பட்டார். நாய்கள் அவ்வளவு சிறப்பாக நடித்தன.

Advertisment

படம் பார்க்கும் அனைவருக்குமே இந்தப் படம் கிடைக்கும். குறிப்பாக நாய்களோடு உணர்வுப்பூர்வமாக மிக நெருக்கமான தொடர்பு கொண்டவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். படம் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. மக்களின் பாதுகாப்பு அடிப்படையில் பார்க்கும்போது இது மிகவும் சரியான முடிவு. இந்தப் படம் மற்றும் சார்பட்டா பரம்பரையின் திரையரங்கு அனுபவத்தை நிச்சயம் மிஸ் செய்கிறேன். மக்களுடைய பாதுகாப்பிற்காகத்தான் என்பதற்காக அதை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

இன்றைக்கு வரைக்கும் சார்பட்டா பரம்பரை மாரியம்மாள் கதாபாத்திரம் பேசப்படுகிறது. என்னுடைய அக்கா பசங்களேஎன்னை மாரியம்மா சித்தி என்றுதான் அழைக்கின்றனர். நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களைத்தான் தேடித்தேடி நடிக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் முந்தைய கதாபாத்திரங்களின் தாக்கம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

சார்பட்டாவிற்கு பிறகு கதை சொல்ல நிறைய பேர் வந்தார்கள். ஆனால், இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் சில வரையறைகள் வைத்துள்ளேன். நான் மற்றவர்களை இன்ஸ்பயர் பண்ணவேண்டும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரத்திலிருந்து ஒரு பெண் சினிமாவிற்கு வந்துள்ளார் என்றால் அது நான் மட்டும்தான். எனக்கு அடுத்து வரக்கூடியவர்களை இவர் நடித்திருக்கிறார்... நாம் ஏன் நடிக்கக்கூடாது என்று நினைக்கவைக்கும் உதாரணமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்". இவ்வாறு துஷாரா விஜயன் தெரிவித்தார்.