காட்டெருமை போன்ற வலிமையான கபடி வீரனையும், ஒரு சமூகத்தின் நம்பிக்கைக்குரிய காளமாடனையும் இணைத்து, நுட்பமான ஆயிரம் செய்திகளைத் தன் திரைமொழி மூலம் திகட்டாத காட்சிகளாகக் கோர்த்து உண்மைக்கு மிகஅருகில் “பைசன் காளமாடன்” என்ற திரைப்படத்தைத் தந்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
1990-களில் தென் மாவட்டங்களில் நிலவிய சாதிய வன்முறையைப் பின்னணியாகக் கொண்டு, பின்தங்கிய கிராமத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் கபடி மீதான தீவிர ஈடுபாட்டையும், அதில் சாதனை புரிய வேண்டுமென்ற அவனது துடிப்பையும் மையமாக வைத்து, சில உண்மைச் சம்பவங்களும் ஒரு சாதனைச் சரித்திரமும் திரையாக்கம் பெற்றுள்ளன.
ஒரு விளையாட்டு, உள்ளூரிலும் தேசிய அளவில் விளையாடும் போதும், எப்படி இரு குழுக்களுக்கு இடையேயான பகையாகவும், தேசங்களுக்கு இடையேயான மோதலாகவும் வெளிப்படுகிறது என்பதை இயக்குநர் மிக அழுத்தமாகவும், கச்சிதமாகவும் பதிவு செய்துள்ளார்.
கபடி விளையாடத் திடலுக்கு செல்லும் முன்பு அவர்கள் கைகளில் அணிந்துள்ள வண்ணக் கயிறுகளை அறுக்கும் க்ளோசப் காட்சியின் மூலம், விளையாட்டிற்கு சாதியோ, மதமோ எந்த அடையாளமும் கிடையாது என்பதை ஆணித்தரமாக இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்; இது பாராட்டுக்குரியது.
கந்தசாமி கதாபாத்திரத்தை வடிவமைத்தபோதும், பாண்டியராஜா கதாபாத்திரத்தை வடிவமைத்தபோதும் மிக நேர்மையைக் கையாண்டுள்ளதாகவே இந்தப் படத்தைப் பார்க்கும்போது நான் உணர்ந்தேன்.பாண்டியராஜா - கந்தசாமி இருவருக்கும் இடையேயான தீராத பகையைக் காட்டும்போதும் அவர்களின் சமூகப்பார்வையை வெளிப்படுத்தும்போதும் எவ்வித சார்பற்று சமுக பொறுப்புணர்வோடு படம்பிடித்துள்ளார்.
கபடியில் தனது திறமையால் அசாதாரண திறனை வெளிப்படுத்தும் ஒரு இளைஞனைத் தானே நேரில் சென்று தட்டிக் கொடுத்து பாராட்டி, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியான அந்த நாயகனைத் தனது அணியில் சேர்த்துக் கொண்டபோது, “அவன் நம்ம பையன் இல்ல அண்ணாச்சி” என்று உடனிருந்தவர்கள் சொல்வதைக் கேட்டு, “அதை நான் கேட்டேனா…? நம்ம கிளப் டீமில் அவனை யாரு என்னன்னு பார்த்து நான் சேர்க்கல, அவன் கண்ணில் தெரிந்த கபடியை மட்டுமே பார்த்து சேர்த்தேன்” என்று கந்தசாமி பேசும் வசனத்திலும் “என் பகையை என் ஊர் பகையாக நான் பார்க்கிறது இல்ல” என்று அவர் குறிப்பிடும்போதும், தன்னுடைய கபடி அணி வீரர்களுடன் கந்தசாமி அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்கும்போது, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்துள்ள நாயகனின் அருகே அமர்ந்து உண்பதாக ஒரு காட்சியைப் பதிவு செய்துவிட்டு, அதைக் குறிப்பிட்டுப் பேசும் தன் சமூகத்தினரிடம் “சும்மா இதையே சொல்லாத…” என்று மறுப்பதிலும் மிக அற்புதமான பதிவை மேற்கொண்டுள்ளார் இயக்குநர்.
அதே வேளையில், “வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு மரியாதையைக் கொடுத்திருக்கு, அதை நான் விட்டுவிட முடியாது” என்று பேசும் கந்தசாமியின் குரலில் இருந்து, இரு வேறு குழுக்களுக்கு இடையே நிகழும் பகையைக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.அதேபோல், எதிர் முனையில் பாண்டியராஜா கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போதும், மிக நேர்த்தியாக, உண்மைக்கு மிக அருகில் நின்று வசனங்களையும் காட்சிகளையும் செதுக்கியுள்ளார் இயக்குநர்.
குறிப்பாக, “சாதி பெருமை பேசுறவன் எல்லாம், நான் எதுக்காக கத்தி எடுத்தேன் என்பதை மறந்துவிட்டானுவோ…” என்று குறிப்பிடும்போதும், தன் மனைவியை அடிக்கக் கை ஓங்கும் ஒரு ஆணின் கன்னத்தில் அறையும்போதும், தன் விருப்பத்திற்கு எதிராகப் பேசப்பட்ட திருமணத்தை நிறுத்தி, பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகத் தன் குரலைப் பதிவு செய்தபோதும், “நம்மைச் சுற்றிப் போடப்பட்டுள்ள வேலியை உடைப்பது மட்டுமல்ல; வேலியே போடாத உயரத்துக்கு போவது எவ்வளவு முக்கியம் தெரியுமா…?” என்று கதாநாயகனின் வளர்ச்சியைக் குறிப்பிட்டுப் பேசும்போதும் திரையில் மின்னுகிறார் இயக்குநர்.
அதேபோல், நாயகன் பேசும் வசனங்களில் மிக முக்கியமாக நான் கருதுவது, “எதற்கும் இங்கு காரணம் சொல்ல வேண்டியதில்லை; அது ரொம்ப வலிக்கும். எல்லோருக்கும் நான் யாருன்னு தெரிந்திருக்கும்போது, எனக்கு நான் யாருன்னு தெரியாதா…?” என்று முன்னேறத் துடிக்கும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூக இளைஞனின் வசனம் என்னை உலுக்கியது.அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அழகாகப் படம்பிடித்து திரைப்படமாக்கி வெளியிட்டுள்ள இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
கபடி வீரராக உயிரோட்டமான நடிப்பை வழங்கியுள்ள துருவ் விக்ரம், ஏதும் செய்வதறியாது கையறு நிலையில் தவிக்கும் ஒரு அப்பாவாகத் தன்னுடைய அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் நடிகர் பசுபதி, பாண்டியராஜா கதாபாத்திரத்திற்கு அச்சு அசலாகப் பொருந்திப் போன இயக்குநர் அமீர், கந்தசாமி கதாபாத்திரத்தை வாழ்ந்து காட்டிய நடிகர் லால், பி.டி. மாஸ்டராகக் கபடி பயிற்சி அளிக்கும் நடிகர், நாயகி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இந்தத் திரைப்படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, இந்தக் கதைக்கு நியாயம் செய்திருப்பதாகவே நான் நம்புகிறேன். அவர்களின் இந்த அர்ப்பணிப்பிற்கு நான் எனது நெஞ்சார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமாக, இரு வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்ட இந்தப் படம், அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றிருப்பதாக நான் நம்புவதாலும், ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் ஒரு கிராமத்திலிருந்து பயணப்பட்டு பல்வேறு கொடுமைகளை சந்தித்து, உயர்ந்த அர்ஜுனா விருது வரை சென்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையை, நிகழ்கால இளைஞர்களுக்கு ஒரு ஊக்கப் பாடமாகக் காட்சிப்படுத்தியதற்கும், நான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
சமூகத்தை மேம்படுத்தும் இதுபோன்ற நல்ல படைப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற என் ஆசையையும் தெரிவித்து, மீண்டும் பைசன் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/dv-2025-10-29-11-03-51.jpg)