
தமிழ், மலையாள, தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் துல்கர் சல்மான், தமிழில் கடைசியாக ஹே சினாமிகா படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்த கல்கி 2898 ஏ.டி. படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். இதில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடித்திருக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார் துல்கர் சல்மான்.

அந்த வகையில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி நடந்த இடத்தில் பெண் ரசிகை வந்திருந்தார். துல்கர் சல்மானை பார்த்ததும் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கினார். பின்பு தேம்பி தேம்பி அழுதுக் கொண்டே துல்கர் சல்மானை பார்த்து உங்களை கட்டியணைக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தினார். உடனே அந்த ரசிகையை துல்கர் சல்மான் அழைத்து கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தி, இனி அழக்கூடாது என அறிவுறுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரசிகை, துக்லர் சல்மான் என்னுடைய அண்ணா போல என்றும் அவரை பார்த்ததும் ரொம்ப எமோஷ்னலாகி விட்டேன் என்றும் இப்போது சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.