மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1; சந்திரா’. இப்படத்தை துல்கர் சல்மானின் ‘வேஃபாரர் ஃபிலிம்ஸ்’ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. டாமினிக் அருண் இயக்கியுள்ள இப்படத்தில் நஸ்லன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், கடந்த 29ஆம் தேதி தமிழ், உள்ளிட்ட இன்னும் சில மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. 

Advertisment

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 5 நாட்களில் ரூ.81 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும் ரசிகர்களின் வரவேற்பால் கூடுதல் திரை இப்படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் கன்னடர்களைக் குறித்து இடம்பெற்றுள்ள வசனம் கர்நாடக மக்களிடம் கோவத்தை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில், கர்நாடக வசன விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது. 

தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “படத்தில், ஒரு கதாபாத்திரம், பேசிய வசனம் கர்நாடக மக்களின் உணர்வுகளைத் தற்செயலாகப் புண்படுத்தியிருப்பதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.  எங்கள் நிறுவனம் எப்போதும் மக்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. அதனால் நடந்த விஷயத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். மேலும் அந்த வசனம் எந்த தவறான நோக்கத்தோடு வைக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். விரைவில் அந்த வசனம் நீக்கப்படும். அது மக்களை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுமாறும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார்.